பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

79


அந்த சோபாவுக்குள் முதுகு காட்டிக்கிடந்த ஜெயலலிதா மீது காகிதச் சுருள்களை எறிகிறார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவரான திருநாவுக்கரசு, செல்விக்கு பாதுகாப்பாக முதுகு வளைய நின்று கொள்கிறார். அமைதி திரும்புகிறது. ஜெயலலிதா சோபா செட்டில் இருந்து எழுந்து கலைந்திருந்த தலைமுடியை முழுமையாக கலைத்து விட்டு முகத்தை அழுகை ஆக்கிக் கொண்டு பேரவையில் இருந்து வெளியேறுகிறார். முதல்வர் நிதி நிலை அறிக்கையை தட்டுத் தடுமாறி படிக்கிறார்.

இந்த நிகழ்வை, திருச்சி வனொலி செய்தியில் உள்ளது உள்ளபடி விளக்கிவிட்டு, இறுதியில் கலைஞரின் கண்ணாடி உடைந்ததையும், ‘ஜெயலலிதாவும் தலைவிரி கோலமாக பேரவையிலிருந்து புறப்பட்டு இதோ போய்கொண்டிருக்கிறார்’ என்று செய்தி போட்டேன். மாலை பத்திரிகைகள் வருவதற்கு முன்பே இது காட்டுத் தீ போல் பரவிவிட்டது. அ.தி.மு.க தொண்டர்களுக்கு தலைவிரி கோலந்தான் மனதை உறுத்தியதே தவிர அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த நிகழ்ச்சிகளை உள்வாங்க மறுத்தார்கள்.

நானும் என் உதவியாளர்களும் கோட்டையில் இருந்து பல்லவ பேருந்தில் புறப்பட்டோம். விவேகானந்தர் இல்லத்திற்கு அருகே பேருந்து வரும் போது நான்கைந்து குண்டர்கள் அல்லது தொண்டர்கள் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் எறிந்தார்கள். தலைபிழைத்ததே தம்பிரான் பாக்கியம். நான் ஒலிபரப்பிய செய்தியே கல்லாக பாய்ந்தது கண்டு, சிறிது நேரம் கல்லாகிப் போனேன். பேரவையில் நடந்த சமாச்சாரங்களுக்கு பயணிகள் எப்படிப் பொறுப்பாவார்கள் என்கிற குறைந்தபட்ச பகுத்தறிவு கூட இவர்களுக்கு இல்லை. இந்தக் காட்டுமிராண்டித் தனமான கல்லெறியை நினைத்தால் இப்போது கூட பயமெடுக்கிறது.

மாலையில் அத்தனை பத்திரிகைகளும் ஜெயலலிதா துகிலுரியப் பட்டதாக செய்திகளை வெளியிட்டன. ஆனால், சென்னை வானொலி நிலையம் மட்டும் பட்ஜெட் செய்திகளை வெளியிட்டு விட்டு, பின்னர் பேரவையில் நடந்த சம்பவங்களை விளக்கியது. ஜெயலலிதா துகிலுரியப் பட்டார் என்று ஒரு வரிகூடச் சொல்லவில்லை. ஆனாலும், ஜெயலலிதா தாக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதை நேரில் பார்த்தது போல், நமது தலைவாதி தலைவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கைகளை