பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

என் பார்வையில் கலைஞர்


என் பிரசன்னத்தை அங்கீகரிப்பார். இதனால், நான் பட்டபாடுகள் மறைந்து போகும்.

எனது செய்தி வித்தியாசமாக இருந்தது. எடுத்துக்காட்டாக சென்னையில் வெள்ளம் பெருகி, தனது குடிசையை நோக்கி செல்லும் நீரை ஒரு ரிக்ஷா தொழிலாளி மண்ணை போட்டு தடுக்கிறார். இந்த நிழல் காட்சியை பார்த்துவிட்டு நான் வயிற்றில் மண்ணள்ளிப் போட்ட மழைக்கு , இவர் மண்ணள்ளி போடுகிறார்’ என்றேன். வெளிநாடுகளில் இருந்து, மனிதநேய (Human interest) நிழல்படங்கள் வரும். இவற்றிற்கு, நான், தக்கபடி விளக்கம் எழுதி ஒளிபரப்பினேன். அப்போது நரசிம்மச்சாரி என்பவரும் என்னோடு செய்தியாசிரியராக பணியாற்றினார். நல்ல பண்பாளர். தமிழகமெங்கும் ஒளிபரப்பாகும் செய்திகளை ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, இது சமுத்திரம் செய்தியா அல்லது நரசிம்மாச்சாரி செய்தியா என்று மக்கள் பந்தயம் வைப்பதாகவும் அறிந்தேன். தமிழகம் முழுக்க எங்கள் செய்தியின் தோரணைக்கு மிகப்பெரிய வரவேற்பு.

கலைஞர் விடுக்கும் நான்கு பக்க அறிக்கைகளை, அவற்றின் தன்மை மாறாமல் ஒருபக்க செய்தியாக சுருக்கி வெளியிடுவேன். இப்போது மாநில மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் உதவி இயக்குநராக இருக்கும் அப்போதைய மக்கள் தொடர்பு அதிகாரியும் எனது இனிய நண்பருமான சுபாஷ், மாநில அரசுச் செய்திகள் தக்கபடி வரும் வகையில் தொடர்பு கொள்வார். சிலசமயம் அவற்றை அனுப்ப முடியவில்லை என்றால் படித்துக் காட்டுவார். நான் அவற்றில் முக்கியமானவற்றை குறித்துக் கொண்டு உடனடி செய்தியாக்குவேன்.

1990ஆம் ஆண்டு அக்டோபர் முப்பத்தியொன்று .... வழக்கம்போல் இரவு பத்து இருபது செய்திகளை முடித்துவிட்டு பதினொரு மணியளவில் வீடு திரும்பினேன். கலைஞருடன், நான் உடனே பேசவேண்டும் என்று உதவியாளர் சண்முகநாதன் தெரிவித்ததாக என் மனைவி குறிப்பிட்டார். உடனே, நான் சண்முகநாதனை தொடர்பு கொண்டபோது ‘கலைஞர் கோபமாக இருக்கிறார். உங்களை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளச் சொன்னார்’ என்றார். நான், உடனே கலைஞருக்கு டெலிபோன் செய்து, அவரது கோபத்தை குறைக்கும் வகையில் ‘என்ன சார் ரொம்ப கோபமா இருக்கிங்களாமே’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டேன்.