பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

85


இப்படி ஒரு முதல்வரிடம் கேட்கலாகாது. கலைஞரிடம் உரிமை கொண்டாடியதால், அப்படி நான் கேட்டு விட்டேன். கலைஞரும் கோபத்தைக் காட்டாமல், வருத்தத்துடன் பேசினார்.

‘நீங்களும் என்னை சூத்திரனா நினைச்சுட்டிங்க சமுத்திரம்’.

‘நானே பனையேறி... உங்களை ஏன் சார் சூத்திரனா நினைக்கப் போறேன்?’.

‘நான் பனையேறிக்கும் கீழே இருப்பவன்’

‘என்ன சார் நீங்க? உங்களை விட முழுமையான தமிழன் யார் சார்? அவனவன் சாதித் தமிழனா இருக்கான். நீங்க ஒருத்தர்தான் முழுமையான தமிழன். இது எல்லாருக்கும் தெரியும். சார். உங்களுக்கு ஏன் சார் தெரியல?’

‘அப்படின்னா நீங்க ஏன் செய்திகளில் கலைஞர் கருணாநிதின்னு போடக்கூடாது?’

‘அப்படி யாருக்கும் போடுவது இல்ல சார். எல்லாம் திரு அல்லது திருமதி தான்’

‘அப்படின்னா அன்னை இந்திராகாந்தின்னு என் நியூஸ்ல போட்டீங்க’

நான் புரிந்து கொண்டேன். கலைஞருக்கு தன்னை செய்தியில் கலைஞர் என்று அழைக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, எதற்காக நான் அன்னை என்று அடைமொழி போட்டு செய்தி ஒலிபரப்பினேன் என்பதுதான் அவரது மனத்தாங்கல் அல்லது வாதம். இதற்காக அருமையாக ஒரு சொல்வலை பின்னி என்னைச் சிக்க வைத்து விட்டார். உடனே, நான் பதிலளிக்கத் தயங்கினேன். அமங்கலமான ஒன்றை எப்படிச் சொல்வது என்று யோசித்தேன். பிறகு, சமாளித்துக் கொண்டு இன்றைக்கு ‘இந்திராகாந்தியோட நினைவுநாள் அந்தம்மா கொலை செய்யப்பட்ட நாள்’. இந்த மாதிரி நினைவு நாட்களில் தலைவர்களுக்கு உரிய அடைமொழிகளை போட்டுக் கொள்வோம், என்றேன். உடனே கலைஞரும் ‘நீங்க சொல்வதும் சரிதான், நான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்பது புரியும்’ என்று அமைதியோடு பதிலளித்தார். எனக்கு தூக்கம் நன்றாக வந்தது.