பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலி 231

அத்தோடு நீங்க பார்க்காத பெரியவாளா? காஞ்சிபுரம் உங்களுக்குக் கொல்லைப்புறம். தாஸ் சாமர்த்தியமே, இதிலே நம்பிக்கையில்லே அதிலே நம்பிக்கையில்லேனுட்டு பெரியவாள் மேலே பக்தி பொங்கி வழியறதோ? பட்டுப் புடவை வாங்கப்போறான்கள்.

ரகு ஒரே வாய்ச்சவடால், ஒரு வேலையிலும் நிலைச்சு நிக்கறதாத் தெரியல்லே. வேலையில் இல்லாமலும் இல்லை. வேலைக்கு நான் தேட வேண்டாம். அது என்னைத் தேடிண்டு வரும். நான் படிச்சிருக்கிற படிப்பு அப்படி!'

மூணாமவன் என்னைக்குமே மூடு சூளை. இப்போ தன் சூளையில் தானே வெந்துண்டிருக்கான். இவாளை அடுத் தடுத்து மேம்படிக்க வச்சு இவள் நகையெல்லாம் ஜாடா முழுகிப்போச்சு. நினைச்சுப் பார்க்கறதுகளா? ஒரு காலணா ஒத்தாசையில்லை. ஒரு தடவை கிஸ்திக்குப் பணம் தட்டுப் படறது. உழவு மாடு வாங்கணும்னு கேட்டு எழுதினால் ஒரு மாசம் கழிச்சுப் பதில் வரது, இதுக்குத்தான் நிலத்தை அப்பவே வித்துடச் சொன்னேன்’னு எல்லாம் பொய்த்துப் போச்சு. இதுகளா விழுதுகள்? கழுத்துக்குச் சுருக்குகள்.

என்ன நீங்களே பேசிக்கறேள்?"

பேசினேனா என்ன?’’ முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

சின்னச் சின்ன ஒசைகள் கூடப் புஷ்டியான அர்த்தம். பிதுங்கும் இரவின் நிசப்தம். ரேழித் திண்ணையில், தலைக்கு நேர்விட்டத்தில் பட்சிக் கூண்டில் சிறகுகளின் பட படப்பு. அவை ஏன் தூங்கவில்லை. அங்கேயும் கலவரமா? இவ்வுலகமே பிரம்மாண்டமான கூண்டு ஜந்துக்கள் மூலைக்கு மூலை ஒடுகின்றன. நாம் ஜந்துக்கள் இல்லாமல் பின் என்ன? நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்குகிறோம். அவை நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.