பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

முடியரசன்


“முதிர்கடன் ஞாலம் முமுவதும் விளக்கும்

கதிரொருங் கிருந்த காட்சி போல”

கண்ணகியும் கோவலனும் கட்டிலில் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார். இரு கதிரும் ஒரு சேர இருந்தாற் போல இவ்விருவரும் இருந்தனர் என்பது கருத்து. இங்கே அவ்விருவரும் இரு கதிர் எனக் கூறப்படுதலால் கண்ணகியைத் திங்களாகவும் கோவலனை ஞாயிறாகவும் நாம் கொள்ளலாம். ஆகவே, பெண்மை தலைமை பெறுங் காப்பியத்தின் தொடக்கத்தில், ஞாயிறு, திங்கள் என்ற முறை வைப்பை மாற்றித் திங்களை முதற்கண் கூறுகிறார்.

இக் காப்பியம் பெண்மைக்குத்தான் முதலிடம் தருகிறது என்பதற்கு மற்றொரு சான்றும் உளது.

செங்குட்டுவனும் அவன் மாபெருந் தேவியாகிய இளங்கோ வேண்மாளும் அரியணையில் ஒருங்கிருக்குங்கால் சாத்தனார், கோவலன் கொலையுண்டதும் கண்ணகி பாண்டியனிடம் வழக்காடி வென்றதும் உண்மையறிந்த பாண்டியன் உயிர்துறந்ததும் உடனே பாண்டியன் மனைவி பெருங் கோப்பெண்டு கண்ணகியின் துயர் பொறாது உடனுயிர் நீத்ததும் கண்ணகி வஞ்சி நோக்கி வந்ததும் கூறுகிறார். இதனைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகி, பெருங்கோப்பெண்டு இவ்விருவருள் வியந்து பாராட்டற்குரியவர் யார் என அறிய விழைகின்றான். அருகில் இருந்த அமைச்சரிடம், எவர் சிறந்தோர் என வினவியிருக்கலாம். அன்றிப் பிறரிடம் வினவியிருக்கலாம். ஆனால், செங்குட்டுவன் அவர்களிடம் வினவினான் அல்லன். தன் மனைவி இளங்கோ வேண்மாளை நோக்கி,

“உயிருடன் சென்ற ஒருமகன்தன்னினும்
செயிருடன் வந்த இச்சேயிழை தன்னினும்

தன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்”

என்று வினவுகிறான். அவளும் கூர்த்த மதியினள் ஆதலின் அம் மகளிரில் ஏற்ற இறக்கங் கூறாது, திறமையாக விடை பகர்கின்றாள்.

“பாண்டியன் மனைவி தன் கணவன் துன்பம் காணாது கழிந்தனள். அக் கற்புக்கரசி துறக்கத்தில் பெருநிலை பெறுக. நம்நாட்டை நோக்கி வந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசுவோம்” என்று விடை தருகிறாள். தன் மனைவியின் மனக்குறிப்புணர்ந்த செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலையெடுத்துக் கோவிலமைக்க முடிவு செய்தனன்.

செங்குட்டுவன் தன் மனைவியிடம் பெருங்கோப்பெண்டு, கண்ணகி இவ்விருவருள் எவர் சிறந்தவர் என வினவியதாலும், அவள் தந்த மறுமொழியின் குறிப்பையுணர்ந்து அக் குறிப்பை நிறைவேற்றக் கோவிலெடுக்க முயன்றமையாலும் பெண்மைக்குத் தரப்பட்ட முதன்மையை நாம் உணர்கிறோம்.