பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்து

87


இம் மங்கல வாழ்த்துப் பாடலில் மற்றொரு செய்தியும் அறிய முடிகிறது. இப் பாடலில் புகாரும், சோழன் வெண்கொற்றக் குடையும், அவன் திகிரியும் அவன் கருணையும் போற்றப்படுகின்றன. இளங்கோவடிகள் நடுவு நில் பிறழாத துறவியாதலின் சோழனைப் போற்றியது போல மதுரைக் காண்டத் தொடக்கத்திற் பாண்டியனையும், வஞ்சிக் காண்டத் தொடக்கத்திற் சேரனையும் போற்றிப் புகழ்ந்திருத்தல் வேண்டும். இக் காப்பியத்துள் மூவேந்தரும் இடம் பெறு கின்றனர். அதனாற்றான் சாத்தனார், இளங்கோவடிகளை நோக்கி, இக் கதை

“முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியது

அடிகள் நீரே அருளுக”

எனக் கூறுகிறார். இளங்கோவடிகள் துறவியாதலின் நடுவுநிலைமை பிறழாது மூவேந்தரையும் ஏற்றத் தாழ்வின்றிக் கூறுவார் எனக் கருதுகின்றார் சாத்தனார். எனினும் பாண்டியனையும் சேரனையும் சோழனைப் போற்றியது போலப் போற்றவில்லை. ஏன்?

காப்பியத்துள் சோழன் எப்பழிக்கும் ஆளாகவில்லை. ஆதலின், அவனைப் போற்றுகிறார். பாண்டியனோ குற்றமற்ற கோவலனைக் கள்வனெனக் கொலை செய்து பழிக்கு ஆளாகிவிடுகிறான். ஆதலின், பழியுடையானைப் போற்ற விரும்பவில்லை. சேரனோ அடிகளுக்கு உடன் பிறந்தவன். தன் உடன் பிறந்தானை - தன்னாட்டானைப் போற்ற அடிகள் மனம் இடந்தரவில்லை. போற்றினால் தற்புகழ்ச்சியாகக் கருதப்படும். ஆதலின், அவனையும் விட்டுவிட்டார் எனக் கருதலாம் எனத் தோன்றுகிறது.

இதே மங்கல வாழ்த்துப் பாடலின் மற்றொரு செய்தியையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

“வானூர்மதியம் சகடனைய வானத்துச்
சாலியொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை”

என்னும் வரிகள் வருகின்றன. கோவலனுக்கும் கண்ணகிக்கும் மதியமானது, சகடென்னும் உரோகிணியைக் கூடும் நல்ல நாளிலே திருமணம் நடந்தது. மாமுது பார்ப்பான் திருமணத்தை நடத்தி வைக்கின்றான்; மறைவழி காட்டுகிறான்; தீவலம் செய்கின்றனர். இவ்வளவு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றும் அம் மணமக்கள் வாழ்க்கை எவ்வாறிருந்தது? மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக அமைந்ததா? வாழ்க்கை முழுதும் கண்ணீர்தானே சிந்தினாள் கண்ணகி! பொருள் முட்டுப்பாடும் ஏற்பட்டுச் சிலம்பை விற்கும் நிலை ஏற்பட்டதே! கோவலன் கள்வனென்ற பழிக்கு ஆளாகிக் கொலைத் தண்டனை பெற்றானே! கண்ணகி ஆதரவற்றவளாகி, வேற்று நாடடைந்து மாள்கிறாளே! அவர்களுக்கு ஒரு