பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

கவியரசர் முடியரசன் திராவிட இயக்கம் ஈன்றெடுத்த தன்மானக் கவிஞர். இவர் தம் வாழ்நாள் முழுதும் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு மேன்மையுறத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு பாவாணர் ஆகிய பெருமக்கள் வழி நின்று உழைத்தவர். நம் மொழியும், நம் இனமும், நம் நாடும் உலக அரங்கில் உயர்ந்து நிற்க வேண்டும் எனும் பெரும் நோக்கில் நூல்கள் பல எழுதியவர்.

இதோ நூலுள்........

உலக நாடுகள் பலவும் தத்தம் தாய் மொழிவழியாக அறிவியல் முன்னேற்றங் கொண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது. ‘தமிழ் மண்ணின்’ நிலையோ....... அவலம் நிறைந்ததாகவுள்ளது. தமிழர்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் உழைத்தால்தான் தமிழ் வளரும். இல்லையேல் எப்படி வளரும் தமிழ்?

மகார் நோன்பு விழா

குழந்தைகள் விழா தமிழர்க்கே உரிய விழாவாகும். குழந்தைகட்கு கல்வியை ஊட்டும் விழா. விளையாட்டுணர்வை ஊட்டி அவ்வழியே கல்வி புகட்டி விளையாட்டாகவே எதையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது உளநூல் உணர்த்தும் விழா - மகார் நோன்பு விழாவாகும்.

ஒருமையா? ஒற்றுமையா?

“ஒருமையுடன் நின்று திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” எனும் இராமலிங்க அடிகளின் பாடல் வரிகளால் ஒருமை உணர்வையும், பள்ளியாசிரியர்கள் ஒன்றுபட்டு நின்று பணி செய்து பின்னர்ப் பிரிந்து தத்தமது கடமையை ஆற்றுவதால் ஏற்படுகின்ற ஒற்றுமை உணர்வையும் வலியுறுத்துகிறார் கவிஞர்.

குழந்தை சில சமையம் எளிதாகவும் சில சமையம் வேதனைகளுக்கிடையிலும் பிறப்பதுண்டு. கவிதை பிறப்பதும் அப்படித்தான்.

இருபதாம் நூற்றாண்டு, தமிழ்க் கவிதைகளுக்கு ஒரு நற்காலம், எழுச்சிக்காலம், பொற்காலம் ஆகும். ‘தமிழின் ஒளி’ உலகம் முழுதும் பரவிய காலம். கவிஞர்கள் தம்மை மறந்த நிலையில் தாம் எழுதும் பாட்டுப் பொருளுடன் ஒன்றி விடுவது தான் ‘களி’ ஆகும். காப்பிய உறுப்பினர்களுடன் இரண்டறக் கலந்து உணர்வுகளுடனும், பொருள்களுடனும் ஒன்றி நின்று எழுதுவதுதான் கவிதையாகும். இதுவே ‘களி’ எனப்படும்.