பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எப்படி வளரும் தமிழ்?

5


என்று ஆங்கிலப் பெயர்களுக்கு அடிமையாகின்றனர். எம் மதம் பற்றினும் தமிழராக நின்று, தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொள்வதால் வரும் குறையென்ன?

ஈண்டு உண்மை நிகழ்ச்சியொன்றைச் சுட்டிக் காட்டுவது பயன்தரும். மதுரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொறியியல் வல்லுநர் ஒருவர், ஈரான் ஈராக்கு முதலிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குத் தங்கியிருந்தபொழுது, அந் நாட்டவர் இவரை நோக்கி, ‘உங்கள் பெயரென்ன?’ என்று வினவினர்.

‘அப்துல்லா’ இவர் தந்த மறுமொழி.

‘ஏன் எங்கள் மொழியில் பெயர் வைத்துள்ளீர்?’ அவர்கள் வினா.

‘நான் முசுலிம்’ இவருடைய விடை.

‘அது தெரியும்; எங்கள் மொழியில் நாங்கள் பெயர் வைத்துக் கொள்கிறோம்; எங்களுக்கு அதன் பொருள் தெரியும்; உங்களுக்குப் பொருள் விளங்குமாறு உங்கள் மொழியில் அல்லவா பெயர் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்காரராயிற்றே! தமிழிலல்லவா வைத்திருத்தல் வேண்டும்?’ என்று வினவ, மறுமொழி தர வாயில்லாமல் இவர் பேசாதிருந்துவிட்டார்.

இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஸ்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது.

இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். இசுலாமியர், கதிரவன், மதியண்ணல், மலர், அன்பு என்னும் பெயர்களால் தம்மை மேம்படுத்திக் கொள்கின்றனர். கிறித்துவர் வளன் அரசு, கோயிற் பிள்ளை, இளம்பிறை, மின்னல் என்னும் பெயர்கொண்டு மகிழ்வதுடன், வழிபாடுகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் தமிழே பயன்படுத்துதல் வேண்டும் என முனைந்தும் வருகின்றனர். இவ்வனைத்தும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியனவே. எனினும், அளவு போதாது; பெருகுதல் வேண்டும். நூற்றுக்கு நூறு இல்லாவிடினும் எண்பது விழுக்காடாவது வளர்தல் வேண்டும். பெரியார், அறிஞர், சான்றோர், அரசியற்றலைவர் பட்டபாட்டுக்குப் பயன் அந்த அளவாவது வேண்டாவோ?