பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படி வளரும் தமிழ்?

7


ஆங்கிலத்துக்கு வழிவழி வந்தோர் என்பாரும் பரவியுள்ளனர். வடமொழியே தம் தாய்மொழியெனக் கொண்டு, அதன் வளர்ச்சிக்கே வாழ்பவரும் நீண்ட நெடுங்காலமாக இங்குள்ளனர். இன்னும் பல்வேறு மொழியாளர்க்கும் உறைவிடமாகவுள்ளது. எஞ்சியோரே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அவருட் பலர் கல்லாதார்; பலர் தமிழ் தமக்கு உரியதென எண்ணாதார்; கற்றறிந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சிலர், தமிழிற் பிறமொழி கலந்துதான் பேசுதல் வேண்டும், எழுதுதல் வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் நண்ணாதார். ஆதலாற்றான் தமிழுணர்ச்சி தலைதூக்கவும் வளரவும் வழியில்லாமற் போகிறது.

இங்கே பிறந்து, இங்கே வளர்ந்து, இங்கே வாழ்ந்து இம் மண்ணிலேயே சாகப் போகிறவர்கள், தம் உள்ளத்திற் பிறமொழி ஆளுகைக்கு இடந்தருவது வருந்தத்தக்கதே. வந்து போவோரைப் பற்றிக் கவலையில்லை; வாழ்ந்து சாவோரைப் பற்றித்தான் கவலை கொள்ள வேண்டியுளது. அனைவரும் இந் நாட்டுக்குரியர், இம் மொழிக்குரியர் என்று உண்மையில் நம்பி வாழ்தல் வேண்டும். சென்னையில் மறைமலையடிகளார் தலைமையில் தந்தை பெரியார் நடத்திய இந்தியெதிர்ப்பு மாநாட்டில், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.உரையாற்றும் பொழுது, ‘தமிழ், காவிச்சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; கறுப்புச் சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; கதர்ச் சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; தமிழ்நாட்டில் உடற்சட்டையெடுத்த ஒவ்வொருவனுக்கும் தமிழ் சொந்தம்’ என்று குறிப்பிட்ட மணிமொழியை நெஞ்சிற் பதிய வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒன்றுபட்ட உணர்வு ஏற்படுமேல் தமிழ் வளர இயலும். இன்றேல் தமிழ் எப்படி வளரும்?

(இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா மலர்)