பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

மகார் நோன்பு

நம் பழம் பெரும் இலக்கியங்களாயினும், பிற்கால இலக்கியங்களாயினும் அவை விழாக்கள் பற்றிய குறிப்புகளைப் பெரிதும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

‘விழவு நின்றவியன் மறுகு’ (மதுரைக் காஞ்சி.328)

‘விழவு அறாவியல் ஆவணத்து’ (பட்டினப்பாலை-158)
 
‘விழவு அறாதன விளங்கொளி மணி நெடு வீதி’
(பெரியபுராணம்)


‘விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்’ (பெரும்பாணாற்றுப்படை-411)

‘சாறுதலைக் கொண்டென’ (புறம். 82)

என்றெல்லாம் இலக்கியங்கள் இயம்புவதைக் காண்கிறோம். அக் கூற்றுகளால் நம் நாட்டில் ஊர்தோறும் தெருத்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வந்தன என்னும் உண்மையை நாம் உணர்கிறோம்.

இன்னும் ‘நீயாங்குக் கொண்ட விழாவினும் பலவே’ (புறம்.33) என்றும் ‘விழவு மேம்பட்ட நற்போர்’ (புறம். 88) என்றும் பேசுகின்றன. இத்தகு இலக்கியப் பேச்சுகளால் தெய்வ விழா, வதுவை விழா, சிறு சோற்று விழா, போர் விழா என்றின்னோரன்ன பல்வகை விழாக்கள் நிகழ்ந்தன என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

திங்கள் தவறாமல் இன்றும் நாடெங்கும் விழாக்கள் நடைபெற்று உணர்வோம். பெருவிழாக்கள், சிறு விழாக்கள் தேர்விழாக்கள், மலர் விழாக்கள் போன்ற பல்வகை விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் கடவுட் கோட்பாடுடையனவும் கல்விக் கோட்பாடுடையனவும் பாராட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்டனவும் என எத்தனை எத்தனையோ அடிப்படை நோக்கங்களை உடையனவாக விளங்குகின்றன.

பழங்காலத்தும் இன்றும் விழாக்கள் நடைபெற்று வந்தன-வருகின்றன. எனினும் முன்னைய விழாக்கள் அனைத்தும் இன்று நடைபெறுகின்றன என்றல் அமையாது. பல வழக்கொழிந்தன. இன்று நிகழ்வுறும் விழாக்கள் அனைத்தும்