பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகார் நோன்பு

13


வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளியம்புகள் வைத்திருப்பர். ஏழையராயின் அவர் கைகளில் கோலாட்டக் குச்சிகளே அம்புகளாகத் தோற்றமளிக்கும். ஊரின் நடுவே வாழை மரமொன்று நன்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். அம்பேந்திய இச் சிறுவீரர், அம்மரத்தின் மீது தம் ஆற்றலைக் காட்டுவர். சிறிது நேரத்தில் அப்பகைவாழை நார் நாராகி, உருச்சிதைந்து வீழும். சிறு பருவத்தில் கோலாட்டக் குச்சியேந்தி வாழையின் மார்பைப் பிளந்து கீழே வீழ்த்தி வெற்றிக் களிப்புடன் வீடு திரும்பிய அக் காட்சி இன்னும் என் மனத்தே பசுமையோடிருக்கிறது.

மேற்கூறிய அம்பு போடும் நிகழ்ச்சியும் சிறுவரோடு தொடர்புடையதே என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர் மரபு, வீர மரபு, ஆதலின், அம் மரபுக்கேற்ப இளஞ்சிறார்க்குக் கல்வி தொடங்கும்போதே போர்ப் பயிற்சியையும் வீரத்தையும் விளையாட்டாகவே தொடங்கி வைத்துள்ளனர். நம் முன்னோர், கல்வியும் வீரமும் குழந்தைகளுக்கு விளையாட்டாகவே ஊட்டியுள்ளனர் என்னும் உண்மையையும் இதன் வாயிலாக நாம் உணர முடிகிறது.

சிறாரும் விற்பயிற்சி, வேற்பயிற்சியுடையர் என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று நமக்குப் புலப்படுத்தும். “அவ் வீரனுடைய பதி, வில்லின் முன் அம்பைத் தேர்ந்தெடுத்துத் தொடுக்கும் வேட்டையாடும் சிறு பிள்ளைகளின் முன் முயல்கள் பாயும் முன்றிலையுடையது” என்பது அப் பாடற் கருத்தாகும். அப் பாடல்,

“வில்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறார்

முன்முன் முயல்உகளும் முன்றிற்றே”

என்பதாகும்.

‘கணைதெரியும் சிறுசிறார்’ என்ற தொடரை உற்று நோக்குக.

இதுகாறும் கூறிய கொலு வைத்தல், கோலாட்டம் ஆடுதல், கல்வி தொடங்குதல், அம்பு போடுதல் போன்ற நிகழ்ச்சிகளால் இவற்றை அடிப்படையாகக் கொண்ட இத் திருநாள் குழந்தைகளுக்காக நம் முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட பெருநாள் என்பது உறுதியாகிறது. குழந்தைகட்கு விளையாட்டாகவே எதையும் கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்பது உளநூல் உணர்த்தும் உண்மை. இவ்வுண்மையை நன்குணர்ந்த தமிழர், இத்தகு ஒரு திருநாளை, குழந்தைகள் விழாவை ஏற்படுத்தியிருக்கின்றனர். இப்போது சில ஆண்டுகளாக உலகக் குழந்தைகள் விழா என்று கொண்டாடி வருகிறோமல்லவா? இந்த விழா முன்பே நம்நாட்டில் உயரிய முறையில் கொண்டாடப் பெற்று வந்திருக்கிறது. நாம் மறந்துவிட்டோம் ‘தசரா’ என்றும் ‘நவராத்திரி’ என்றும் ‘சரசுவதி பூஜை’ என்றும் ‘ஆயுத பூஜை’ என்றும் எப்படியெல்லாமோ பெயரை மாற்றி வைத்து, மயங்கிப் பெரியவர்களாகிய நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

இவ் விழா குழந்தைகள் விழா. தமிழர்க்கே உரிய விழா என்பதில் ஐயமே இல்லை. இதன் பெயர் மறையும்படியாக மேலே பூசப்பட்ட வண்ணங்களைக்