பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

ஒருமையா? ஒற்றுமையா?

இந்திய அரசியலில் ‘ஒருமைப்பாடு’ என்ற சொல் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கிறோம். இடையிடையே ஒற்றுமை என்ற சொல்லும் அடிபடுவதுண்டு. இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருவன போலத் தோன்றும். ஆனால், அவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு இருத்தலை நுணுகி ஆராய்வோர் எளிதில் அறிந்துகொள்வர். ஆதலின், அச்சொற்கள் பற்றி ஆராய்ந்தறிவது நலம் பயக்கும் என்ற கருத்துடன் இக் கட்டுரை எழுதப்படுகிறது. சொல் பற்றிய ஆராய்ச்சி ஒன்றுதான் நோக்கமே தவிர அரசியல் ஆராய்ச்சி அன்று. நாட்டில் பிளவுபட்டநிலை இருத்தல் தகாது; ஒன்றுபட்ட நிலை உருவாதல் வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிற்றான் ‘ஒருமைப்பாடு’ என்ற சொல்லும் ‘ஒற்றுமை’ என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

ஒருமை என்றால் என்ன

முதலில் ‘ஒருமைப்பாடு’ என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இதற்கு இராமலிங்க அடிகளார் அருமையான விளக்கம் தருகிறார். இறைவனே! உன்னை உள்ளன்புடன் நினைக்கின்ற அடியவருடைய தொடர்பு எனக்கு வேண்டும் என்ற கருத்தை ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற பாடல் வரியாற் குறிப்பிடுகின்றார். இதில் ஒருமை என்ற சொல்லைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். இறைவனை எவ்வாறு நினைப்பது? கண்ணொன்று காணச் செவியொன்று கேட்க, நாவொன்று சுவைக்க, மூக்கொன்று முகர மனம் இறைவனை நினைப்பதாற் பயனில்லை. ஏனைய பொறிகள் தத்தம் புலன்களிற் செல்லாது அடங்கி, ஒடுங்கி ஐம்புலனும் ஒரு புலனேயாக மனம் இறைவனை நினைத்தல் வேண்டும். அதுதான் ஒருமை; அதுதான் உண்மையான அன்பு: அவ்வாறு நினைப்பவரே ‘உத்தமர்’ ஆவர் என்பது அடிகளார்தம் உள்ளக்கிடக்கை. அவ்வாறாயின் பிறவெல்லாம் தம்தம் தனிநெறியிற் செல்லாது அடங்கி, ஒடுங்கி ஒன்று மட்டுமே தலை நிமிர்ந்து செயற்படுவது ‘'ஒருமை’ என்றாகிறது. இஃது ஒற்றுமையாகாது.