பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபதாம் நூற்றாண்டில் கவிதை

31


எளிமை, உரிமைக் காலத்தும் வேண்டுமெனப் பேசுவது வளர்ச்சியைக் குறிக்காது. எளிமை எளிமை எனப் பெருமுழக்கம் ஒருபாற் கேட்பினும் மற்றொரு பால் அருமையும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது.

பாமர மக்களுக்காக எளிய நடை வேண்டும் என்போர், எப்பொழுதுமே மக்கள், பாமரராக இருத்தல் வேண்டுமென்று விழைகின்றனரா? ஊர்தோறும் பள்ளிகள் வேண்டுமென்று பாரதி கண்ட கனவு, நனவாகிவரும் இக் காலத்திற் கற்றவர் தொகை பெருகும்; மற்றவர் தொகை அருகும். இக் காலத்தும் எளிமை வேண்டப்படுவதோ? கற்றவர் தொகை வளர்வது உண்மையாயின் கவிதை நடையும் வளர்வதுதானே முறை? வளர்ச்சி பெறவேண்டிய கவிதை நடையைத் தளர்ச்சிக்கு ஆளாக்குவது நன்றோ? எளிமை வேட்பாளர் இதனை எண்ணித் துணிக.

நினைக்க நினைக்க - என்றும் இனிக்கும் கவிதைக்கு நன்மொழி புணர்த்தலே அழகாகும். ஆதலின் தூய, இனிய, பொருள் செறிந்த முழுமை பெற்ற தமிழ்ச் சொற்களாலான கவிதைகள் பெருகுதல் வேண்டும். வருங்காலத்திற் பெருகிவரும் என்னும் நம்பிக்கை இந் நூற்றாண்டிலேயே ஒளிவீசத் தொடங்கி விட்டது.

ஒளிநல்கும் கவிஞர் கூட்டம்

இந் நூற்றாண்டில் கவிதைக்கு எழுச்சியூட்டித் தமிழ் மொழிக்கு ஒளி நல்கிய பாரதியார், கவியுலகின் விடிவெள்ளி, கவிவெறி கொண்டு தமிழையே தம் உயிர்மூச்சாகக் கொண்டு விளங்கிய பாரதிதாசன், அவ்வுலகின் இருளோட்ட வந்த இளஞாயிறு, அவர்தம் பரம்பரையினராக வந்து தமிழ்மொழிக்கு மெருகூட்டும் எண்ணற்ற கவிஞர்குழு அவ்விளஞாயிற்றின் செங்கதிர்கள்.

பாரதி ஒரு பேரருவி, பாரதிதாசன், பேரருவியால் தோன்றிய உயிராறு, பரம்பரையினர் அவ்வாற்றிலிருந்து பிரிந்து வளமூட்டும் கிளையாறுகள். பாரதி ஒரு வித்து. பாரதிதாசன் அவ்வித்தில் முளைத்த ஆலமரம். பரம்பரையினர் அவ்வாலமரத்தின் விழுதுகள்.

பாரி காதை எழுதிய இரா.இராகவையங்கார், அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம், சுவர்க்க நீக்கம் போன்ற நூல்களை எழுதிய வெ.ப.சுப்பிரமணிய முதலியார், மண்ணியல் சிறுதேர் (உரையும் பாட்டும் கலந்தது) இயற்றிய பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார், இனிய கவிதைகள் எழுதிய புலவரேறு வரத நஞ்சையப்பிள்ளை, இசைப்பாடல்கள் புனைந்து வரும் அருட்கவி சேதுராமன், சங்கப் பாடல்களை நிகர்த்த பாக்களைத் தந்து வரும் துரை.மாணிக்கம், ம.இலெ.தங்கப்பா இவரனையார் பலரும் இந் நூற்றாண்டினரே.

‘நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்’ என்னுங் குறிக்கோள் கொண்ட பாரதிதான் புதுமைக் கவிதையுலகுக்கு முதல் வழிகாட்டி. அவர் காட்டிய