பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

முடியரசன்


வழியிற்றான் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், ச.து.சு.யோகி போன்ற கவிஞர்கள் தொடர்ந்து சென்றனர். இவர்கள் நடந்த நெறியில் நூற்றுக்கணக்கான கவிஞர்கள் தடம் பார்த்து அடியொற்றிச் சென்றனர்; செல்கின்றனர்.

கவிதை வடிவில் தன் வரலாறு புனைவது பாரதி காட்டிய ஒரு புதுநெறியாகும். அந் நெறியில் சுயசரிதை என்ற பெயரில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கவிதை நூல் ஒன்று யாத்தளித்துள்ளார். பல மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ஆக்கியுள்ளார்.

இவ்வாறு எண்ணற்ற கவிஞர்கள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிப் பாமாலை புனைந்துள்ளனர். ஈண்டு எழுதப்பட்டோர் சிலர். பெருகும் என்றஞ்சி எழுதாது விடப்பட்டோர் பலர். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைகளின் நிலையைப் பொதுப்பட விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இது தனி நூல்களின் திறனாய்வு அன்று. அவ்வாறு தனித்தனியாகத் திறனாய்வு செய்து எழுதப்புகின் அஃது ஒரு பெருநூல் வடிவம் பெறும்.

எதிர்காலம் பொற்காலம்

பயன்மரங்களும், மலர்ச் செடிகளும் நிறைந்த தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுகின்றோம். அத் தோட்டத்துள் அவை மட்டுமா வளர்ந்து பயன் தருகின்றன? நீர் செல்லும் நெறியிடை வேண்டப்படாத சில செடிகளும் தோன்றி விடுகின்றன. அதைப்போலவே கவிதைத் தோட்டத்துள் கனி மரங்களோடு வேறு சில செடிகளும் தோன்றத்தான் செய்யும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளல் காலதேவன் செயலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மரபு மாறாமல், இலக்கணத்தை இகழாமல், உயரிய-இனிய-அழகிய ஒண்டமிழ்ச் சொற்கள் பெய்து நாட்டுக்கு வேண்டும் நற்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நிலைத்து நிற்கும் கவிதைகளைக் காவியங்களைப் படைக்கவல்ல கவிஞர்கள் தோன்றி வருகின்றனர்.

இந் நூற்றாண்டு கவிதைக்கு ஒரு நற்காலமே. அந் நற்காலம் பொற் காலமாக மாறுங் காலம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. “மிக விரைவிலே தமிழின் ஒளி உலக முழுதும் பரவாவிட்டால் என் பேரை மாற்றி அழையுங்கள்” என்று பாரதியார் கூறினார். அக் கூற்று வாய்மையாகிவிட்டது. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவிவரும் காலம் இது. அவ்வோசையைக் கவிதைகளாற்றான். நன்கு ஒலித்துக் காட்ட முடியும். பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாகிய நெட்டைக்கனவு நனவாவது உறுதி; உறுதி. தமிழ்ப் பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாவிக்கும் நாள் நம் எதிரே காட்சியளிக்கிறது.

(1968 உலகத்தமிழ் மாநாட்டு மலர்)