பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

முடியரசன்


“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா”

என்று வீரவுணர்ச்சியூட்டி வெளிக் கொணர்ந்து,

“மானிடம் என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்னிரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்.”

என்று மானிடத்தின் பேராற்றலை எடுத்தியம்பி மாயாவாதத்தைத் தூக்கி எறிந்து, அவனை நிமிர்ந்து வாழச் செய்கின்றார்.

பிற நாட்டினர், தாம் உயர்ந்தோர் என்ற செருக்கினால் தமிழினத்தை அடிமையாக்கும் வெறுக்கத்தக்க குற்றத்தைச் செய்கின்றனர். பொறுத்துக் கொண்டே போவதா? எவ்வளவு நாள் பொறுப்பது? பொறுத்தது போதும் பொங்கி யெழு என்று போர் முரசு கொட்டுகின்றார். ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டாகப் பாடிய அப் பாடலைக் காண்போம்:

“தருக்கினால் பிறதேசத்தார்
தமிழன்பால், என்னாட் டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தார்
ஆதலால் விரைந்தன் னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்த சொல் கேட்டின் பத்திற்

குதிக்கும் நாள் எந்த நாளோ?”

என்ற முரசொலி கேட்டால் விசையொடிந்த தேகத்திலும் வீரம் சேரும்; கோழையும் வீரனாவான்.

பிள்ளைப் பேற்றைப் பெரிதாகப் போற்றி வந்த நம்மிடையே காலச் சூழ்நிலையால் குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்ற மறுமலர்ச்சி எண்ணம் இன்று தோன்றிப் பெருகி வருகிறது. நம் பாவேந்தர் இதற்கு முன்பே இம் மறுமலர்ச்சிக் கருத்துக்கு விதை தூவிவிட்டார்.

“உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்

பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே”

என்றும்,

“அன்னத்தின் தூவி அனிச்சமலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே
மின்னல் ஒளியேவிலைமதியா ரத்தினமே

கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே”