பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

முடியரசன்


“பாரதிதாசன் மேல்நாட்டுக் கவிஞர்களைப் போலக் கலையைக் காலத்தின் கண்ணாடியாக்குகின்றார்; காலத்தையே படைக்கின்றார்; காலத்தையே மாற்றவும் செய்கின்றார்; மாறிய காலத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்கின்றார்” என்று பேரறிஞர் அண்ணா கூறியது முக்காலும் உண்மை.

பாரதிதாசன் பாடல்களில் தென்றலும் வீசும், புயலும் அடிக்கும். குயிலும் கூவும் அரியும் முழங்கும்; வெண்ணிலவும் வீசும், செங்கதிரும் காயும். இனிப்பும் இருக்கும், கசப்பும் இருக்கும். தண்மையும் உண்டு; வெம்மையும் உண்டு.

நம் கவிஞர் மறுமலர்ச்சிக் கருத்துகளைக் கனல் தெறிக்கப் பாடியுள்ள முறைகளினால் இவரைப் பற்றிக் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் இருப்பது இயல்பே. எனினும் கருத்து வேறுபாடு ஒன்றே கருதி நம் வாழ்நாளிலே தோன்றிய ஒரு மாபெரும் கவிஞனை, உலகப் புகழுக்குரிய நம் தமிழ்க் கவிஞனை, பிறவிக் கவிஞனை நாம் மறந்துவிடுதல் தகாது; மறைத்து வைப்பதும் அடாது.

“காரிருனால் சூரியன்தான் மறைவதுண்டோ
கறைச் சேற்றால்தாமரையும் வாசம் போமோ?”

என்னும் வரிகளை நினைவிற் கொள்வோமாக. காரிருள் விலகட்டும்; சூரியன் புத்தொளி வீசித் திகழட்டும்; தாமரை மறுமலர்ச்சி பெற்று மிளிரட்டும் மணம் பரவட்டும்.

வாழ்க பாவேந்தர்! வளர்க பாரதிதாசன் புகழ்!

(1966 ஏப்பிரலில் திருச்சி வானொலியில் ஒலிபரப்பானது)