பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

முடியரசன்


பெற்றது; தமிழுடன் ஒன்றாகக் குழைத்து ஆக்கப் பெற்றது. அவளுடைய வாய்ச் சொற்களை உணவு என உருவகம் செய்ததற்கேற்பப் ‘பரிமாறும்’ என்ற சொல்லை இங்கே பெய்து வைத்த கவி உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பரிமாறுவதாயின் உண்பவன் பசி தீர - வயிறார - மனம் நிறைவு கொள்ளும் வகையிலல்லவா பரிமாற வேண்டும்? அம் முறையிலே இத் தலைவியும் தலைவனுடைய காதற் பசிதீர - செவியார - உள்ளம் நிறைவெய்த இன்சொல்லை வழங்கினாள் என்ற உணர்வுகளையெல்லாம், பரிமாறும் என்ற அச் சொல் நமக்குப் பரிமாறுகிறது. மேலும், உணவு பரிமாறுவதற்கும் சொல் பரிமாறுவதற்கும் உள்ள வேறுபாடும் தோன்றக் காண்கிறோம். உணவை ஒரு கையால் பரிமாறுவர்; இன்சொல்லைப் பரிமாறும் தலைவியோ வாயிதழ்கள் என்ற இரண்டு கைகளாலும் பரிமாறுகிறாள். சொல் வெளிவர இரண்டு உதடுகளின் முயற்சியும் தேவையல்லவா? தலைவன் உள்ள நிறைவுக்கு ஒரு கையால் மட்டும் பரிமாறினால் போதாது; இரு கையாலும் பரிமாற வேண்டும் என்னும் கருத்துடன் பரிமாறுகிறாள் என்ற குறிப்பும் தோன்றக் காண்கிறோம்; இன்பமும் பெறுகின்றோம். இவ்வகையில் அமைவதே கவிதையாகும்.

பயிலும் முறை

இவ்வாறு இன்பந் தோன்றச் செய்யும் கவிதைகளை மேற்போக்காகப் படித்துவிட்டால் மட்டும் இன்பம் வந்துவிடாது. துருவித் துருவி ஆராய்தல் வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் நாம் புகுந்து புகுந்து வெளிவருதல் வேண்டும். அப்பொழுதுதான் அதனுள் ஆழ்ந்து மறைந்து கிடக்கும் முத்துகளைக் கண்டெடுக்க முடியும். கவிதையைச் சொல்லிச் சொல்லிப் பார்த்தல் வேண்டும். அப்பொழுதுதான் இன்பம் அரும்புவதைக் காணமுடியும். வாயை மூடிக்கொண்டு, கண்களை மட்டும் ஒடவிட்டு, இன்பத்தைக் காணவில்லையே என்று தேடுவதிலே பயனில்லை. இதனாலன்றோ “ஆயுந்தொறும் இன்பந் தருந் தமிழ்” என்று கச்சியப்ப முனிவரும் “நவில்தொறும் நூல்நயம் போலும்” என்று வள்ளுவப் பெருந்தகையும் உணர்த்திப் போந்தனர்!

சொல்லின் சிறப்பு

கவிதையானது பிணி, மூப்பு, தளர்ச்சி இவற்றைப் போக்க வல்லது; உலகத் துன்பங்களையெல்லாம் நீக்கவல்லது; தனி உலகிற் செலுத்திப் பேரின்பத்தை ஆக்கவல்லது. இத்தகு பேராற்றல் படைத்த கவிதைக்கு அணி, ஓசை, யாப்பமைவு முதலிய பிறவுறுப்புகளும், கருவிகளேயாயினும், சொற்களே அவற்றுட் சிறந்த கருவிகள் என்பது யாவரும் ஒப்புக்கொண்ட முடிபாகும். சொற்கள்தாம் கவிஞன் கருதிய கருத்தை - உணர்ச்சியை நன்கு புலப்படுத்தும் ஆற்றல் பெற்றன; பயில்வார் தம் உள்ளுணர்ச்சிகளையும் கிளறிவிடுவன. சொல் தனியாக நிற்கும்பொழுது அது பொதுவாகப் பொருளுணர்த்துங் கருவியாகவே இருக்கும். ஆனால், அது கவிதையில் இடம்பெறும்பொழுது பிறிதொரு