பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதை இன்பம் - சொல்லழகு

49


ஆற்றலையும் அழகையும் பெற்றுவிடுகிறது. அதனால் கவிதையில் வரும் சொல் மிகப்பெரியதொரு மதிப்பைப் பெற்றுவிடுகிறது. இம் மதிப்பைக் குறைத்து விடுதல் கூடாது என்பதற்காகவே நூலின் இயல்பைக் கூறவந்த பழம்புலவர் ஒருவர் “வழுஉச் சொற்புணர்த்தல்” பெருங்குற்றமென்றும், “நன்மொழி புணர்த்தல்” நூலுக்கு அழகு என்றும் உணர்த்திச் சென்றார். இந் நன்மையை உணராதார் எளிமை என்ற - பெயரால் கண்ட கண்ட சொற்களை எல்லாம் தொடுத்துப் பாக்களைப் புனைந்துவிடுகின்றனர். இப் புனைவு, சொல்லின் மதிப்பைக் குறைப்பதுடன் அமையாது கவிதைப் பண்பையும் பாழாக்குகிறது. பயில்வோர்க்கு இன்பத்துக்கு மாறாகத் துன்பத்தையே கொடுக்கிறது. இதனால் இயற்சொல்லாயினும் திரிசொல்லாயினும் கவிதையில், அழகிய - இனிய - நல்ல சொற்களே இடம் பெறுதல் வேண்டும் என்று உறுதியாகின்றது. பாரதியார் பாடலை வியந்து கூறும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் “சொல்லுக்குச் சொல் அழகு ஏறுமேயடா” என்று இசைத்த பகுதி இக்கருத்துக்கு அரண் செய்வதாகின்றது.

சொல்லழகின் வகை

கவிதையில் வரும் சொல்லழகை அது தரும் அழகு நோக்கி மூன்று வகையாகப் பகுக்கலாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை அமைப்பது ஒருவகை. இதனைச் சொல்லாட்சி என்பர். சொல்லுஞ் சொல்லால் பிற குறிப்புகளும் பெறுமாறு அமைப்பது மற்றொரு வகை. இதனைச் சொல்நயம் என்பர். ஒருசொல் பல பொருளை உணர்த்தி நிற்பது மூன்றாம் வகை. இதனை இரட்டுற மொழிதல் என்பர். இம் மூன்று வகையானும் சொற்கள் கவிதைக்கு அழகு தந்து நமக்கும் இன்பந் தருவனவாம். ஆயினும், முதல் இரண்டு வகையாகிய சொல்லாட்சியும் சொல்நயமுமே கவிதைக்கு மிகச் சிறந்தன என்பர் கவிதை இன்பத்தில் திளைக்கும் பெரியோர். முற்காலப் பனுவல்களில் முதல் இரண்டு வகையுமே பெரிதும் பயின்று வரக் காண்கிறோம். அன்று சொல்லிலே உணர்ச்சியை ஏற்றிக் காட்டினர். பின்னரோ சொல்லிலே “ஜாலவித்தை” காட்டுவாராயினர்.

இனி முற்கூறிய மூன்று வகையான சொல்லழகையும் கவிதைகளிலே காண்போம்.

சொல்லாட்சி

ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லைக் கையாளும் சொல்லாட்சிச் சிறப்புக்குத் திருக்குறள் நல்ல சான்று பகரும். இரவச்சம் என்ற அதிகாரத்தில் “இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று” (1067) என ஒரு குறட்பா வருகிறது. இங்கே அழகு தரும் சொல் “இரப்பன்” என்பதேயாகும். திருவள்ளுவர் தங்கூற்றாகக் கூறுவது இச் சொல். வேறு சில இடங்களிலும் ஆசிரியர் தம்மை உளப்படுத்திக் கூறும் பகுதிகளும் உள. அவ்விடங்களில் பெறுமவற்றுள் யாமறிவதில்லை (61) என்றும், யாம்மெய்யாக் கண்டவற்றுள் (300)