பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

முடியரசன்


என்றும், ‘ஒப்பாரி யாம் கண்டதில்’ (1071) என்றும் தனித்தன்மைப் பன்மை வாய்பாடாகிய ஆசிரியப் பன்மைச் சொல்லாலே யாம், யாம் என்றே கூறிச் செல்கின்றார். இவ்வாறு குறித்து வந்த வள்ளுவர் இரவச்சம் என்ற அதிகாரத்துக்கு வந்தவுடன் இரப்பன் என ஒருமை வாய்பாட்டால் கூறுகின்றார். வழக்கம்போல இரப்போம் எனப் பன்மைச் சொல்லாற் குறியாது ஒருமைச் சொல்லாற் குறித்த முறையில்தான் கவிதைப் பண்பு மிளிரக் காண்கிறோம். அங்கெல்லாம் ஆசிரியராக இருந்த வள்ளுவர் இங்கே இரவலராகிவிடுகிறார். இரவலன் கெஞ்சிக் கேட்கவேண்டுவதுதானே இயல்பு. பெருமிதத்தோடு நின்று கேட்பது தகாது. வள்ளுவரே பிறிதோரிடத்துக் கூறுகிறார் “உடையார்முன் இல்லார்போல் எக்கற்றும்” (395) என்று. ஆதலினால், வள்ளுவரும் இரவலனுக்கு உரிய முறையில் இரங்கிய சொல்லால்-தாழ்ந்த சொல்லால் இரப்பன் என ஒருமையால் கூறுகின்றார். இங்கே ஆசிரியர் இரவலனாகவே அந்தப் பொருளோடு ஒன்றுபட்டுவிடுகின்றார். இவ்வாறு பொருளோடு ஒன்றுபடுதலாகிய கவிஞனுக்குரிய இயல்பை இச்சொல் அழகுற எடுத்துக்காட்டுகிறது. இடத்துக்கேற்ற சொல்லாகவும் அமைகிறது.

சிலம்பில் ஒரு சொல்

இனிச் சிலம்பொலி கேட்போம். பேரியாற்றங்கரையில் செங்குட்டுவன் தன் துணைவியொடு அமர்ந்திருக்கின்றான். பாண்டியன் தன் தவறுணர்ந்து இறந்தமை கண்டு மனம் பொறாது கோப்பெருந்தேவி உயிர் நீத்ததையும், கோவலன் குற்றமற்றவன் என வழக்காடி வெற்றிகொண்டு, வஞ்சி சென்று கண்ணகி வானகம் பெற்றதையும் தண்டமிழாசான் சாத்தன் எடுத்துரைக்கக் கேட்ட செங்குட்டுவன் “நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?” எனத் தன் மனைவியை நோக்கிக் கேட்கிறான். மறுமொழி பகரும் இளங்கோ வேண்மாள் “பத்தினிப் பெண்டிர் பெறும் பேற்றைப் பாண்டிமாதேவி அடைவாளாக; நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்கிறாள். இருவருள் யார் சிறந்தோர் என்று விடையிறுக்கவில்லை. கண்ணகியைப் பரசல் வேண்டும் என்று சுருங்கச் சொல்லி விடுகின்றாள். ஏன் அவளை மட்டும் பரசல் வேண்டும் என்ற வினா எழுமல்லவா? வினா எழுமுன்பே கரணியமும் கூறி விடுகின்றாள். நம்முடைய நாட்டுக்குள் வந்தமையால் பரசல் வேண்டும் என்ற குறிப்பை “நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினி” என்னும் அடைமொழிகளால் உணர்த்திவிடுகிறாள்.

மேலும் இவள் தந்த மறுமொழியில் கடவுள் என்ற சொல்லின் அழகை நினைந்து நினைந்து மகிழ்தல் வேண்டும். அவ்வழகைக் காண்போம். பத்தினியைப் பரசல் வேண்டும். எப்படிப் பரசல் வேண்டும்? கடவுளாக்கிப் பரசல் வேண்டும். கடவுளாக்குதல் என்றால் சிலை எழுப்புதல் வேண்டும். அக் கடவுட் சிலையை எங்கே நிறுவுவது? கோவிலில்தான் நிறுவுதல் வேண்டும்; ஆகவே, கோவில் ஒன்று எழுப்புதல் வேண்டும். கண்ணகிக்கு நினைவுச் சிலை அமைத்து,