பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை இன்பம் - சொல்லழகு

51


அதனை நிறுவக் கோவிலொன்று எழுப்பி வழிபடுதல் வேண்டும் என்ற கருத்துகளை எல்லாம் வினாக்கள் பல்காவகையில் சொல்லிவிடுகின்றாள். வெளிப்படக் கூறினாளா? இல்லை. அவள் உரைத்த ‘கடவுள்’ என்ற ஒரு சொல் இவ்வளவு எண்ணங்களையும் உண்டாக்கிவிடுகிறது. பத்தினிக் கடவுளை என்பதற்குப் பதிலாகப் பத்தினிப் பெண்ணை என்று கூறியிருப்பின் இந்த அழகையெல்லாம் நாம் காண முடியுமா? ஆகவே, இக் கருத்துகளை எல்லாம் தெரிவிக்க, இடத்துக்கேற்ற சொல் கடவுள் என்ற சொல்லேயாகும். இன்னோரன்ன சொல்லாட்சிச் சிறப்புடைய இடங்கள் பலப்பல மிளிர்வதைக் காணலாம் இளங்கோ தந்த சிலம்பிலே.

சொல் நயம்

அடுத்தபடி, சொல்லானது வேறு பிற குறிப்புகளையும் உள்ளடக்கி நிற்கும் அழகைச் சிறிது காண்போம். குறிஞ்சிக் கலியில் ஒரு கட்டம். ஒரு தலைவிக்கு மணமுடிக்க முயல்கின்றனர் பெற்றோர். இதையறிந்த தோழி அறத்தொடு நிற்கிறாள். அறத்தொடு நிற்றலாவது, தலைவி மற்றொருவனை விரும்பியுள்ளாள் என்பதை நாகரிகமாக - அறமுறை பிறழாது - பெற்றோர் ஏற்கும் வண்ணம் உரைப்பது. உரைக்கின்றாள்: “ஒரு நாள் புதுப்புனலாடினோம்; வெள்ளம் தலைவியை அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. அப்பொழுது தற்செயலாக அங்கு வந்த காளை ஒருவன் தன் அருள் மிகுதியால், நீருட் பாய்ந்து அவளை மார்போடு அனைத்து வந்து கரை சேர்த்தான். அன்றுமுதல் அவனுக்கே உரியவளாகிவிட்டாள்” என்று புனைந்துரைக்கின்றாள். அத் தோழியின் கூற்றைக் கவிதையிலே காண்போம்.

“காமர் கடும்புனல் கலத்தெம்மோடு ஆடுவான்
தாமரைக்கண் புதைத்தஞ்சித்

தளர்ந்ததனோ டொமுகலான்” - கலி 39

இதுதான் அவள் கூற்று. “புனலாடுவாள்” என்று மட்டும் கூறியிருக்கலாம்; காமர், கடும்புனல், கலந்து, எம்மோடு, ஆடுவாள் - இத்தனை சொற்கள் ஏன்? என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால், கவிஞனுக்கு அத்தனையும் விலை மதிக்கமுடியாத மாணிக்கங்கள். அச் சொற்களில் குறிப்புப் பொருள்கள் இலைமறை காய்போல் இருத்தலைக் கூர்ந்து நோக்குவார் உணரலாகும்.

சொற்களுக்குள் நாமும் சிறிது நுழைவோம்; அடிகளாசிரியர் என்ற பேராசிரியர் நோக்கின்படி நயங்களைக் கண்டு இன்புறுவோம். புனலாடுவாள் ஆற்றொடு போனாள் என்று மட்டும் கூறியிருப்பின் தாய் சினங்கொள்வாள்; புதுப்புனல் ஆட ஏன் சென்றீர்? என்று சீறுவாள்; வெள்ளம் இழுத்துச் செல்லும் படியாக ஏன் விட்டுவிட்டீர்கள்? என்பாள், நீங்களே அவளைக் கரை சேர்த்திருக்கலாமே? என்று ஒருபடி மேலேறுவாள்; அவளைத் தனியாகவா புனலாட விட்டீர்கள்? என ஏங்குவாள். இத்தனைக்கும் விடை பகர்ந்தாக வேண்டும்;