பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேர்ப் பலா

67


கணவனையிழந்த தன் மகளைக் கண்டு தாயொருத்தி வருந்திக் கூறுவதாகக் ‘கைம்பெண் நிலை’ என்னும் பாடலில் நம் கவிஞர் தமது வருத்தத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார். ‘கண்போற் காத்து வளர்த்த என் மகள் இந் நிலையடைந்தாளே! மணமகன் பிணமகனானான். அதனால் அவள் கைம்பெண் ஆனாள். இனி அவள், திலகமோ குழலில் மலர்களோ அணியின் உலகமே வசைகள் பலவும் புகலுமே! இவள் யார் வீட்டுக்குச் சென்றாலும் தீச் சகுனமென்று காணக் கூசுவரே! மேலும் ஏசுவரே! தரையிற் படுத்தல் வேண்டும்; உண்டி சுருங்கல் வேண்டுமே! மறுமணம் புரிவது சிறுமையென்று கூறுகிறார்களே! அவ்வாறு கூறுவது குறுமதியென்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்’ என்று புலம்பும் தாய்மனத்தில் மகளுக்கு மறுமணம் செய்தல் வேண்டுமென்ற துணிவை அரும்பச் செய்கிறார் கவிஞர்.

ஒருத்தியும் ஒருவனும் கருத்தொருமித்த காதலர்களாக இல்லறம் நடாத்திவரும் பொழுது, கணவன் நோய்வாய்ப்படுகின்றான். அப்பொழுது அவன் அவளை அழைத்து, “இன்பத்தின் எல்லை தேடி, நாம் நலம் நுகருங்கால், எனக்கு இக் கொடிய நோய்வந்துவிட்டதே! என் மனத்தில் ஓர் எண்ணந் தோன்றுகின்றது. அதனை இப்பொழுதே உன்னிடம் சொல்லிவிடுகின்றேன், இனி, நான் பிழைப்பதரிது. பிணியால் நான் இறந்துவிடின் நீ கைம்பெண்ணாக இருந்து வருந்தாதே. வைதிகத்தைப் பொருட்படுத்தாதே. உன் விருப்புக்குரியான் ஒருவனை நாடி மணஞ் செய்துகொள். ஊர் தூற்றுமேயென்று கருதாதே. நின் பகுத்தறிவால் குணம், குற்றம் ஆய்ந்தறிந்து நட, அச்சம் தவிர், துயர் கடப்பாய், துணை பிடிப்பாய்” என்று கணவனே மறுமணத்துக்குக் கதவு திறந்துவிடுவதாக ‘இறந்தவன் மேற்பழி’ என்ற பாடலாற் கவிஞர் கடைதிறப்புச் செய்கிறார்.

‘கைம்மைத் துயர்’ என்னும் பாடலில், அத்துயர் கண்டு, கலங்கி, வெதும்பி, ஆற்றாது இவ்வுலகினரைச் சாடுகிறார். "கைம்பெண்டிர் துயர் காண்பதற்குக் கண்ணிழந்திரோ? அன்றிக் கருத்திழந்திரோ? மணவாளன் இறந்துபடின் மங்கை நல்லாள் யாது செய்வாள்? அவளை ஆலைக் கரும்பாக்கி, உலக இன்பம் அணுவளவும் அடையாமல் சாகச் செய்கிறீர்களே! மனைவியிழந்த குமரன் மீண்டும் மணம் செய்துகொள்கிறான். ஆனால், பெண்ணை மட்டும் கைம்பெண்ணாக்கி வதைக்கலாமோ? பெண்ணுக்கொரு நீதி கண்டீர்! பேதமெனும் மதுவையுண்டீர் உலகோரே கண்ணில் ஒன்றைப் பழுது செய்தால் உலகம் உம்மைக் கான்று உமிழாதோ?” என்று சீறுகிறார்.

மறுமணம் என்றால் எத்தனை தடைகள் விதிக்கின்றீர்? அனை கடந்தால் உங்கள் தடை எந்த மூலை? என்று வினவிய பாவேந்தர், பெண்ணைப் பார்த்து மறுமணத்துக்குத் துணிந்து புறப்படு என அறைகூவல் விடுகின்றார். ‘கைம்மை நீக்கம்’ என்ற பாடலிலே. இப் பாடல் கைம்பெண் ஒருத்தியைக் காதலித்த ஒருவன் கூறுவதாக அமைந்தது. இதோ அப்பகுதி.