பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

தமிழின்பம் தனி இன்பம்

வள்ளுவப் பெருந்தகை, தமிழ் இன்பம் எத்தகையது என்பதை ஓர் உவமை வாயிலாக விளக்கிக் காட்டுகிறார். பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு எப்படிப்பட்ட இன்பம் தரும்? படிக்கப் படிக்கச் சிறந்த நூல்கள் தரும் உள்ளார்ந்த இன்பம் போலப் பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு இன்பம் தரும் என்று கூறுகிறார். முதல்முறை படிக்குங்கால் ஒருவகையின்பம்; மறுமுறை படிக்குங்கால் வேறுவகையான இன்பம்; அடுத்தமுறை படிக்குங்கால் அதனினும் சிறந்த இன்பம். இவ்வாறு பயிலப் பயிலப் புதுப்புது இன்பம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

“நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு” (குறள்-783)

‘தமிழ்விடுதூது’ எனப் பெயர்தாங்கிய இனிய நூலொன்றுளது அதன் ஆசிரியர் அந் நூலுள் ஓரிடத்தில்,

“இருந்தமிழே உன்னால் இருந்தேன்-இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

என்று கூறுகிறார். இமையோர் விருந்தமிழ்தம் எல்லார்க்கும் கிடைப்பதன்று; எளிதாகவும் கிடைப்பதன்று; சாவா மருந்தெனப் புகழப் படுவதும் ஆகும். ‘அந்த அமிழ்து கிடைப்பினும் அதனை நான் விரும்பேன்’ என்று கூறுகிறார். ஏன்? அதனினும் சிறந்த தமிழ் இருக்கிறது; அதனாலேயே நான் உயிரோடிருக்கிறேன் என்று கூறுவதால் தமிழ்தரும் இன்பத்தின் மேன்மையைத் தெள்ளிதின் உணரலாம்.

தமிழ், தமிழ் என்று பலமுறை அடுக்கியடுக்கிச் சொல்லிப்பார்த்தால் அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கும். ஆகவே தமிழ் இனிமையானது; இன்பந் தரவல்லது என்பது புலனாகும். இதன் இனிமையையும் இன்பத்தையும் உணர்ந்தமையாலேதான் நம் பாரதியார்.

“தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

சங்கமரர் சிறப்புக் கண்டார்”