பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழின்பம் தனி இன்பம்

71


இதன் பொருட்டு மன்னன், புலவருக்குப் பதினாறு கோடிப் பொன் பரிசிலாகத் தந்தனன், இச் செய்தி

“பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு

கோடிபொன் கொண்டது நின் கொற்றமே”

என்னும் தமிழ்விடுதூது என்னும் நூலால் அறியப்படுகிறது.

“பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு

கோடி பசும்பொன் கொடுத்தோனும்”

என்று சங்கரசோழன் உலா என்னும் நூலும்,

“தத்துநீர் வரால்குருமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப்பரிசில் வாணர்பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்

பண்டு பட்டினப்பாலை கொண்டதுமே”

எனக் கலிங்கத்துப்பரணியென்ற நூலும் இச் செய்தியை எடுத்துப் போற்றுகின்றன.

ஒரு நூலுக்குப் பதினாறு கோடி பொன் பரிசாகத் தந்தனன் அம் மன்னன் என்றால், அத் தமிழ் அவனுக்கு எத்தகைய இன்பந் தந்திருக்கக் கூடும். அந்த இன்பப் பெருக்கன்றோ அவனைப் பெருங் கொடைஞன் ஆக்கியுள்ளது.

பட்டினப் பாலை என்னும் அச் சீரிய நூல், சோழநாட்டின்கண்ணமைந்த ஊரொன்றில் எழுப்பப்பட்ட பதினாறு கால் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட பெருமையுடையது.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்பகை காரணமாகச் சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். பொருது வெற்றியுங் கொண்டான். அவ் வெற்றிச் செருக்கால் ஊரைப் பாழ்படுத்த ஆணையிடுகிறான். படைவீரர் பாழ்ச்செயலில் ஈடுபடுகின்றனர். பெரும் பெரும் மாளிகைகள் தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. அதனைக் கண்டு, மாறன் வெற்றி வெறிகொண்டு நகைக்கின்றான். ஆனால், ஓரிடத்துக்கு வந்ததும் அவனது வெறி விலகுகிறது. ஆணவச் சிரிப்பு அடங்குகிறது. “அதோ அந்த மண்டபத்தை ஒன்றுஞ் செய்யாதீர், அப்படியே விட்டுவிடுங்கள்” என்று ஆணையிடுகின்றான்.

அவ்வாணையைக் கேட்ட வீரர்கள் திகைத்து நிற்கின்றனர், வேந்தன் ஏன் இப்படித் திடீரென மாறினன் என வியப்புடன் அவனை நோக்கினர். “வீரர்களே, அது பட்டினப்பாலை என்னும் நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறுகால் மண்டபம்; அதனை பழுதுபடுத்திவிடாதீர்” என விழியில் ஒளி வீசப் பேசினான்.

பாண்டியன் பகை மறந்தான்; வெறி விடுத்தான்; தமிழை நினைந்தான்; அத் தமிழ் அரங்கேறிய இடம் அவன் கண்ணெதிரில் தோன்றியது. அது தூய்மை