பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார் போற்றும் தமிழர் நாகரிகம்

75


“என் நிழல் வாழ்நர்செல்நிழல்காணாது,
கொடியன் எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழிதூற்றுங்கோலேன் ஆகுக” (புறம் - 72)

என்று குறித்துள்ளான் என்றால் குடிமக்கள் நலங்காக்கும் கொள்கையில் பண்டை மன்னர் கொண்டிருந்த அக்கறை நினைந்து நினைந்து பாராட்டத் தக்கதன்றோ ?

கோவலன் கள்வனென்று கருதிக் கொலைத் தண்டனை விதித்தது தவறென வுணர்ந்த பாண்டியன் உடனே உயிர் நீத்த செய்தியைச் சாத்தனார் உரைக்கக் கேட்க செங்குட்டுவன் வருந்தி,

“மழைவளம் கரப்பின் வான்பேரச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேரச்சம்
குடிபுரவுண்டும் கொடுங்கோலஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்பமல்லது தொழுதக வில்”

எனக் கூறுகிறான். மன்னர் குடிப்பிறத்தல் தொழத்தக்கதன்று; துன்பம் நிறைந்தது; அஞ்சி யஞ்சி வாழுந் தன்மையது என்று அரச வாழ்வை வெறுத்துப் பேசுகின்றான். மன்பதை காக்கும் பொறுப்புணர்ச்சியில் அன்றைய முடியாட்சி அக்கறை காட்டியது என்பதை மேற்கூறியவற்றால் நாம் நன்கு உணர்கிறோம். குடியாட்சியில் கோலோச்சுவோர் மக்கள் நலனில் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதையும் நாம் உணர்கிறோம். முடியாட்சியாயினும் குடியாட்சி யாயினும் கோலேந்திகளின் மனப் பக்குவத்தைப் பொறுத்துதான் ஆட்சி மதிக்கப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் சிலரே. தம் நலனில் அக்கறை கொண்டோர் பலர்.

இனி, மன்பதை அஃதாவது சமுதாயம் எவ்வாறிருந்தது என்பதைக் காண்போம். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தியறிந்து, அவனைக் காணப் பிசிராந்தையார் என்ற புலவர் பெருந்தகை செல்கின்றார். அவரைக் கண்ட சான்றோர் அவரை நோக்கி, யாண்டு பலவாகியும் உமக்கு நரையில்லையே! உமக்கு இஃது எவ்வாறு வாய்த்தது? என வினவினர். அவர் அந் நிலை பெற்றமைக்குப் பல காரணங்கள் கூறுகிறார்.

“ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்
சான்றோர்பலர்யான் வாழும் ஊரே” (புறம்-191)

என்று இறுதியாகக் கூறுகிறார். சான்றோர் பலர் வாழும் ஊர் என்னுடைய ஊர். அதனால் அவருடன் பழகி மகிழ்ச்சியாக இருக்கிறேன். அம் மகிழ்ச்சிப் பெருக்கால் நரையின்றி இளமையுடன் இருக்கிறேன் என்கிறார். இதனால், பண்டை நாளில், எல்லாரும் இன்புற்றிருக்க நினைவதுவே அல்லாமல்