பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 ஆம், எதிர்த்தாற்போல் இருந்த குளிர் பானமும், 'என்ன பாகவதர் ஸார், கூல் டிரிங்க் சாப்பிடவில்லையா?" என்று எஸ்.டி.எஸ்.கேட்ட கேள்வியும் சற்றே மறந்திருந்த தந்தையைச் சட்டென்று அவருடைய நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டன. அந்த அளவுக்குப் பாகவதரின் உள்ளத்தில் இடம் பெற்றிருந்த அந்தச் சம்பவத்தை நேரில் கண்ட நெல்லை நண்பர் திரு தியாகராஜன் செய்யும் 'நேர்முக வர்ணனை' யைக் கேளுங்கள் : 'பாளையங்கோட்டை பிஷப் சார்ஜெண்ட் பள்ளியில் நான் ஆசிரியர் பயிற்சி பயிலும்போது திரு எம்.கே.தியாகராஜ பாகவதரின் பவளக்கொடி நாடகம் திருநெல்வேலி ராயல் டாக்கீஸில் நடைபெற்றது. அது பற்றிய விளம்பரத்தைப் பார்த்த நான், என்பெயருடைய இவருடைய நாடகத்தை எப்படியாவது பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தாலும், திரு எஸ்.ஜி.கிட்டப்பாவே ஒரு சமயம் மேடையில் தோன்றி பாகவதரைப் பாராட்டியிருக்கிறார் என்று கேள்வி பட்டிருந்ததாலும் அன்றைய நாடகத்திற்குச் சென்றிருந்தேன். கூட்டம் எக்கச்சக்கமாயிருந்ததால் பலருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை. ஒரு பக்கம் கூட்டத்தினரின் நெரிசல், இன்னொரு பக்கம் 'எல்லோருக்கும் டிக்கெட் கொடு, எல்லோருக்கும் டிக்கெட் கொடு' என்ற கூச்சல் - இத்தனை அமர்க்களங் களுக்கிடையில் நாடகம் ஆரம்பமாயிற்று. பாகவதர் அர்ஜுனன்; எஸ்.டி.எஸ்.அல்லி, பவளக்கொடி; திரு தேவுடு அய்யர் ஆர்மோனியம், பின்பாட்டு; மிருதங்கம் யார் என்று ஞாபகமில்லை. துவக்கத்தில் பபூன்' வேடம் தரித்தவர் வந்து போனார். அவருக்குப் பின்னால் எஸ். டி. எஸ். வரும் கட்டம். அப்போது எஸ்.டி.எஸ் ஸுக்கு நல்ல உடல் அமைப்பு, நல்ல சாரீரம். அவருக்கும் ஆர்மோனியக்காரருக்கும் பாட்டில் கடுமையான போட்டி ; கேட்கப் பரமானந்தமாயிருந்தது.