பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 மக்களின் கரகோஷத்துக்கு இடையே நாடகம் ஒரு வழியாக முடிந்தது. பாகவதரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நான் ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன். நாடகக் காண்ட்ராக்டர் 'போங்கள், வெளியே போங்கள்!" என்று எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார். காரணம், என்னைப் போல் பலர் பாகவதரை நேரில்காண அங்கே வந்துவிட்டதுதான் அந்த நிலையில் எனக்கும் இன்னும் சிலருக்கும் மட்டுமே அவரைப் பார்க்க எப்படியோ வாய்ப்புக் கிடைத்தது. பாகவதர் கீழே அமர்ந்து முகத்தில் பூசியிருந்த பவுடரைக் கலைத்துக் கொண்டிருந்தார். அதைக் கலைத்த பிறகும் அவருடைய அழகு முகத்தில் களை கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது யாரோ ஒருவர் குளிர் பானம் ஒன்றைக்கொண்டு வந்து அவருக்கு எதிரே வைத்தார். அது சமயம் தன்னுடைய ஒப்பனையைக் கலைத்துவிட்டு அங்கே வந்த எஸ்.டி.எஸ்., என்ன பாகவதர் ஸார் கூல்டிரிங்க் அப்படியே இருக்கிறதே? சாப்பிடவில்லையா? என்று நாடகப் பாணியில் கேட்டார். அதற்குப் பாகவதர் தந்த பதில் என்ன தெரியுமா? ஒரு புன்சிரிப்பு மட்டுமே! இது எனக்கு வியப்பை அளித்தது. 'நாடகத்தில் இரண்டு பேரும் போடு, போடு என்று போடுகிறார்கள்; இங்கே என்னடா என்றால் பாகவதர் வாயைக்கூடத் திறக்காமல் இருக்கிறாரே?’ என்றேன் நான். பக்கத்தில் இருந்தவர் சொன்னார்: 'ஸ், பேசாமல் இரும் பாகவதர் பக்கத்தில் அவருடைய தகப்பனார் இருக்கிறார்; அதனால்தான் அவர் வாயைத்திறக்காமல் இருக்கிறார்!’ - இதைக் கேட்டதும், தந்தையிடம் அவ்வளவு மரியாதையா பாகவதருக்கு என்று எண்ணி மேலும் வியந்தேன் நான்.