பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ராஜன் என்னவோ தன் வாழ்நாளில் பார்க்கவில்லைதான்; ஆயினும் அவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். ஏதாவது ஒரு குச்சியை எடுத்து வைத்துக்கொண்டு அவர் தம் கையிலுள்ள கத்தியால் அதை எப்பொழுது பார்த்தாலும் சீவிக் கொண்டே இருப்பாராம். அவர் என்ன சாப்பிடுகிறார், எப்பொழுது தூங்குகிறார் என்பது யாருக்கும் தெரியாதாம். அவற்றைத் தெரிந்து கொள்ள யாராவது முயன்றால் அக்கணமே அவர் தம்முடைய அங்கங்கள் அனைத்தையும் மூலைக்கு ஒன்றாகச் சிதற விட்டுவிட்டுக் கடகடவென்று சிரிப்பாராம். கை வேறு, கால்வேறு, தலை வேறு, முண்டம் வேறு என்று சிதறிக்கிடக்கும் சுவாமி களைப் பார்த்துக் கொண்டு நிற்க யாருக்குத்தான் தைரியம் இருக்கும்? அவர்கள் அந்தப் பயங்கரக் காட்சியைக் கண்டதும் பதறி அவருடைய அங்கங்களைப் போலவே மூலைக்கு ஒருவராகச் சிதறி ஓடி விடுவார்களாம். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், சுவாமிகள் முழு உருவில் அமர்ந்து, மறுபடியும் ஏதாவது ஒரு குச்சியை எடுத்து வைத்துக்கொண்டு அமைதியாகச் சீவிக்கொண்டே இருப்பாராம்! அந்தச் சமயம் பார்த்து அவரை யாராவது மெல்ல நெருங்கி, அவரிடம் தங்கள் குறையை வெளியிட்டால், 'போங்கடா ஆசையை விடாதவரை உங்கள் துன்பம் உங்களைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்; போங்கடா, போங்க!” என்று விரட்டுவாராம். தப்பித் தவறி 'குறையா, கொஞ்சம் குனி" என்று குனிந்தவன் தலையில் கொஞ்சம் மண்ணை எடுத்துப் போட்டால் அவனுடைய குறையெல்லாம் ஒரே நொடியில் தீர்ந்துவிடுமாம். இத்தகைய மகானிடம் யாருக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது இயல்புதானே? அந்த இயல்பை யொட்டித் தியாகராஜனும் அவரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டான்.