பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 சவத்தைத் திருச்சிக்கு எடுத்துக் செல்வதற்குரிய அனுமதியைச் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கித் தந்துவிட்டார். வழக்கமான சோதனைகள் அனைத்தும் முடிந்தபின் 'கிருஷ்ணமூர்த்தியின் சவப்பெட்டி'என்று சொல்லப்பட்ட 'ஒரு சவப்பெட்டி'பாகவதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு ஒரு சந்தேகம் - அது தம் தந்தையின் சவப்பெட்டியாக இருக்குமா என்று ஆனாலும் அதற்காக அவர் தாமதிக்கவில்லை; அதை உடனே திருச்சிக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு தனி ரயில் பெட்டியையே ஏற்பாடு செய்துவிட்டார். அந்தப் பெட்டியில் அழகான மலர் வளையத்தோடு கிருஷ்ணமூர்த்தியின் சவப்பெட்டி வைக்கப்பட்டது. அத்துடன் பாகவதர் மட்டும் தம் குழுவினருடன் செல்ல வில்லை; திரு. ஒன்னுக்கோனும் அவர்களுடன் சென்றார். தலைமன்னாரிலிருந்து திருச்சிக்கு வருவதற்குள் பாகவதருக்கு இன்னொரு சந்தேகமும் எழுந்தது. இந்தச் சவப்பெட்டிக்குள் 'சவம் என்று ஒன்று இருக்குமா இல்லை அதுவும் இருக்காதா என்பதுதான் அது இந்தச் சந்தேகங்களையெல்லாம் வழியிலேயே தீர்த்துக்கொள்வதற்கு வேண்டிய அவகாசமும் அவருக்குக் கிடைக்கவில்லை. காரணம், செய்தி அறிந்த மக்கள் ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் திரண்டு வந்து, பாகவதரிடம் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, அதே ரயிலில் திருச்சிக்கு வரவும் ஆரம்பித்து விட்டதுதான்! ஒருவழியாகச் சவப்பெட்டி வந்த ரயில் திருச்சி சந்திப்பை அடைந்தது. அங்கே பாகவதரின் தாயார் மாணிக்கத்தம்மாள், அவருடைய சகோதரர்கள், மற்றுமுள்ள சுற்றத்தார் அனைவரும் வந்திருந்தனர்.