பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

எல்லாம் தமிழ்


  கிழவன் சேட்புலம் படரின் இழைஅணிந்து
  புன்றலை மடப்பிடி பரிசி லாகப்
  பெண்டிருந் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
  கண்டி ரக்கோன் ஆகலின் நன்றும்
  முயங்க லான்றிசின் யானே ; பொலந்தேர்
  நன்னன் மருகன் அன்றியும் நீயும்
  முயங்கற் கொத்தனை மன்னே; வயங்குமொழிப்
   பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை
   அணங்குசால் அடுக்கம் பொழியும்
   மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே.

இதன் உரையில், 'நன்னன் மருகனன்றியும் என்றதற்கு, பெண் கொலை புரிந்த நன்னன்போல, வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை என்றமையின் அதுவும் வரைவதற்கு ஒரு காரணமாக உரைப்பாரும் உளர் ' என்று உரையாசிரியர் எழுதியுள்ளார்.

சோறு அளித்த சேரன் :

ப. 18. இரண்டு படைக்கும் சேரன் உணவு அளித்தான் என்பதைப் புறநானுற்றில் உள்ள இரண்டாவது பாட்டின் உரையில், உரையாசிரியர் தெரிவிக்கிறார், "பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" என்ற அடிக்கு, 'பெருஞ் சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்' என்று எழுதிய உரையிலிருந்து இது விளங்கும்.

ப. 25, "மண்திணிந்த" என வரும் பாடல் புறநானுற்றின் இரண்டாவது பாட்டு. சேரமான் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது, என்பது அதன் பின் உள்ள பழங் குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/100&oldid=1530042" இலிருந்து மீள்விக்கப்பட்டது