பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் இட்ட சாபம்

13

தணித்து அத்தண்டனையை மாற்றப் பலர் முயன்றார்கள். மக்கள் யாவரும் ஒரு முகமாக அரசன் செய்கையை வெறுத்தனர். "பெண் என்றால் பேயும் இரங்குமே! இந்த அரசன் பேயினும் கொடியவனாக இருக்கிறானே!" என்று அழுங்கினர். அறங் கூற- வையத்துப் பெரியோர் அரசனிடம் சென்று பேசினர். அவன் இம்மியும் இரங்கவில்லை. தண்டனையை நீக்க முடியாதென்பதை உணர்ந்த அவர்கள் கொலைத். தண்டனைக்கு மாற்றாக ஏதாவது செய்துபார்க்கலாமென்று ஆராய்ந்தார்கள்.

கொலைத் தண்டனை பெற்றவர்களை மீட்கவேண்டுமானால், குற்றவாளிகளின் நிறைக்கு ஏற்ற பொன் தண்டமாக இறுத்தால் மீட்சி கிடைக்கும். பெரியோர்கள் அந்தப் பெண்ணின் தந்தை, சுற்றத்தார் ஆகியவர்களிடம் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவே, அவர்கள் பொன்னைத் தொகுத்தனர். அந்தப் பெண்ணின் நிறையைத் தெரிந்து அதற்கு ஏற்ற பொன்னைக் கொண்டு அவளைப்போல ஒரு பாவை செய்வித்தார்கள். அதைக் கொண்டு அரசன் முன் வைத்தார்கள். பெரியோர், "அரசே, கொலைத் தண்டனை பெற்றவருடைய நிறைக்குத் தக்க பொன்கொண்டு அந்தத் தண்டனையை மாற்றுதல் வழி வழி வந்த வழக்கம். பெண்ணின் குற்றம் அவள் அறிந்து செய்ததன்று. ஆகவே, இந்தப் பாவையை ஏற்றுக்கொண்டு அவளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க வேண்டும்" என்று எடுத்துச் சொன்னர்கள். "இந்தப் பொன்பாவை அவள் தின்ற மாங்காயை மீட்டும் உமிழுமா?" என்று இழிவு தொனிக்கக் கேட்டான் அரசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/21&oldid=1528948" இலிருந்து மீள்விக்கப்பட்டது