பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழுபடையும் பொருபடையும்

31

 தான் செய்ய முடியும். சில காரியங்கள் நம் கையில் இல்லை. மழை பெய்ய வேண்டுமென்று நாம் எண்ணினால் அது உடனே பெய்யாது. ஆனல் அரசர்கள் மழையைப் பெய்யும்படி செய்வார்கள்."

"அது எப்படி முடியும்?"

"செங்கோல் செலுத்தும் வேந்தர்கள் அறம் புரிவார்கள். குடிமக்களுக்கு எளியராக இருப்பார்கள். குடிகளுக்கு ஏதேனும் குறை இருந்தால் அவர்கள் அதை முறையிடுவதற்கு வருவார்கள். அந்த முறையீட்டைக் கேட்பதற்குச் சித்தராக இருக்கும் அரசர்கள் எப்போது மழை வேண்டுமென்று விரும்பினுலும் பெய்யும் என்று பெரியோர் கூறுவர். முறை வேண்டும் பொழுது முன் நிற்கும் அரசர் உறை (மழைத்துளி) வேண்டும்பொழுது மழையும் முன்னிற்குமாம்."

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். சில நாட்களாகத் தன்னைப் பார்க்க வேண்டுமென்று சில குடிமக்கள் விரும்பியபொழுது, அமைச்சர்களை விட்டு விடை சொல்லி அனுப்பியது அவன் நினைவுக்கு வந்தது.

"அரசன் ஒவ்வொரு கணமும், குடி மக்களுக்காக உயிர் வாழ்கிறான். அவன் பிடிக்கும் குடை மற்றவர்கள் வெயிலுக்குப் பிடிக்கும் குடையைப் போன்றதன்று. தன்னுடைய அருளினால் குடிமக்களையெல்லாம் அரவணைத்துப் பாதுகாப்பதற்கு அடையாளம் அது. வெயில் மறைக்க நிற்பதன்று, அந்தக்குடை; வருந்திய குடி மறைப்பது."

அரசனுக்குப் புலவர் பேச்சுக்குள்ளே தனக்கு அறிவுரை ஒன்று இருப்பது தெரிந்தது. தன்னுடைய கடமையை அவர் எடுத்து வற்புறுத்தவே வந்திருக்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/39&oldid=1529096" இலிருந்து மீள்விக்கப்பட்டது