பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் நீரும்

47

 கோலன் என்று கண்ணீருடன் நின்று பழிதூற்றும் பாவி ஆகக் கடவேன் !"

அரசன் முகம் சிவந்தது. அவனுடைய இளமையழகிலே இப்போது வீரமுறுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மந்திரிமார் வியப்புடன் அவனை உற்று நோக்கினர். 'பரம்பரைக்கு ஏற்ற வீரம் !' என்ற நினைவு அவர்கள் உள்ளத்தில் தோன்றியது.

இந்தப் பாண்டிய நாடு தமிழ் வளர்ந்த இடம். பாண்டிய அரசர் புலவரைப் போற்றித் தமிழை வளர்த்தார்கள். மிகச் சிறப்புற்ற புலவர்கள் இந்த நாட்டையும் எங்கள் மரபினரையும் புகழ்ந்து பாடியிருக்கிருர்கள். நான் போர் செய்ய அஞ்சினேனானால் அந்தப் புகழ் என்னாவது ? பகைவரை வெல்லாமற் போவேனானால் ஓங்கிய சிறப்பும் உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனார் முதலிய புகழ்பெற்ற புலவர் என் நாட்டைப் பாடாமல் ஒதுக்கும் நிலை வருவதாகுக ! என்னுடைய குடிமக்களும், சுற்றத்தாரும் துன்புற்று வாட, என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க முடியாத வறுமை என்னை வந்து அடையட்டும்! இந்த வஞ்சினத்தைப் பாண்டிய அரசர் வழி வந்தவன் என்ற உணர்ச்சியோடு நான் சொல்லுகிறேன்."

அரசன் வஞ்சினம் கூறும்போது சிங்கம் முழங்குவதுபோல இருந்தது. உடன் இருந்தோர் அஞ்சி நடுங்கினர். அரசன் தோள் துடித்தது; கண்கள் சிவந்தன ; வார்த்தை ஒவ்வொன்றும் அழுத்தமாக வந்தது. இனி "இந்த உலகமே எதிர் நின்றாலும் போரை நிறுத்த முடியாது” என்று மந்திரிமார் உணர்ந்து கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/55&oldid=1529386" இலிருந்து மீள்விக்கப்பட்டது