பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

எல்லாம் தமிழ்


கும் துறையில் அரசன் கவனம் செலுத்தவில்லை. அரியணை ஏறியவுடன் வில்லைப் பிடிக்க வேண்டி நேர்ந்தமையால் நாட்டைப்பற்றி அப்போது சிந்திக்க இயல வில்லை. போருக்குப்பின் அதில் கிடைத்த வெற்றியிலே மயங்கியிருந்தமையால் பின்பும் அதைப்பற்றிய நினைவு எழவில்லை.

ஏரிகளும், குளங்களும் மேடிட்டிருந்தன; கரைகள் உடைந்து பயனில்லாமல் கிடந்தன சில. நீர் வளம் இல்லாமையால் நிலவளம் குறைந்தது. விளைவு குறைந்தது. பஞ்சம் வந்துவிடுமே என்ற அச்சம் பாண்டி நாட்டு மக்கள் உள்ளத்தே எழுந்தது.

அரசன் படை சேர்ப்பதை விட்டு, வீர விளையாட்டை நிறுத்தி, நாட்டின் நிலையை உணர்ந்து வளம்படுத்த வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை. மந்திரிமார் சொல்ல அஞ்சினர். இளம் பருவம் உடை யவனானாலும் கோபத்திலும் வீரத்திலும் மிக மிக ஓங்கி நிற்பவன் என்பதை அவர்கள் தம் கண்முன்னே பார்த்தவர்கள்.

இந்த நிலை நீடித்தால் பாண்டிய நாட்டில் நிச்சயமாகப் பஞ்சம் வந்துவிடும் என்பதை அறிந்தனர் மந்திரிமார். அரசனுக்கு யோசனை கூறவோ அஞ்சினர். என்ன செய்வது என்று ஏங்கி நின்ற தறுவாயில் சமயசஞ்சீவி போல ஒரு புலவர் வந்தார். குடபுலவியனார் என்பது அவர்பெயர். தமிழ்ப்புலவர்கள் பொதுவாகவே யாருக்கும் அஞ்சாதவர்கள் ; நியாயத்தையே எடுத்துரைப்பவர்கள். அவருள்ளும் குடபுலவியனார் நயமாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/58&oldid=1529391" இலிருந்து மீள்விக்கப்பட்டது