பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயின் பிரார்த்தனை

57

 தில் வைத்த காதல் தளரவில்லை; அது பின்னும் இறுகியது. நமக்கெனவே வாய்த்தவனாகிய அவன் எங்கே சென்றாலும் இங்கே வருவான் என்ற மனத் துணிவோடு அவள் இருந்தாள். அந்தத் துணிவு இல்லா விட்டால் அவள் ஒரு கணம் அமைதியாக வீட்டுக் கடமைகளைச் செய்ய முடியுமா ? கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு நடத்தும் இல்லற வாழ்க்கையில் புறத்தே சென்று வேளாண்மையோ, கைத்தொழிலோ, வியாபாரமோ ஏதாயினும் செய்து பொருள் கொணர வேண்டியவன் கணவன். அறவழியில் அவன் ஈட்டிக் கொணர்ந்த அதனைப் பாதுகாத்து அளவறிந்து, தகுதியறிந்து, வாழ்க்கை நிலையறிந்து செலவிட்டு அறத்தையும் இன்பத்தையும் வளர்ப்பவள் மனைவி. அவள் மனையரசி. அரசிக்கு ஏவலனாக இருப்பவன் கணவன். அவள் உள்ளம் திறம்பினால் மனையில் இருள் படரும். இல்லறம் சீர்குலையும்.

தமிழ் மகளாகிய தலைவி இந்தப் பண்புகளிலே தலைசிறந்தவள். தன் கணவன் நெறி பிறழ்ந்து ஒழுகுவதை உணர்ந்தும் அவள் பின்னும் ஊக்கத்தோடு இல்லற வாழ்விலே ஈடுபட்டாள். விருந்தினர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தும், இரவலர்களுக்கு ஈந்தும் வழக்கம்போல் இல்லறச் செயல்களை நடத்தி வந்தாள். பொருள் ஈட்டும்பொருட்டு வீட்டுத் தலைவன் வெளியூருக்குச் சென்று சில மாதங்கள் தங்கினால் அப்போது இல்லறம் தடைபடாது நடத்துவது அவள் கடமை அல்லவா ? அதே நிலையில் இப்பொழுதும் நடத்தி வந்தாள். அவன் வீட்டில் இல்லை என்ற குறையை வருவார் அறியாதபடி அறம் வளர்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/65&oldid=1529422" இலிருந்து மீள்விக்கப்பட்டது