பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

எல்லாம் தமிழ்


இருந்தாள். மறந்தும் தலைவனைப் பற்றிப் பேசுவதில்லை. அவனை அவள் முன்னிலையிலே குறைகூற அவர்களுக்குத் தோன்றவில்லை. " இவள் உள்ளத்தில் எரிமலை குமுறிக்கொண்டிருக்கிறது. ஆனால், முகத்தில் அதன் சுவடுகூடத் தெரியவில்லை. என்ன காரணம்?" என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டனர். உண்மை அது அன்று. தலைவி தலைவனுடைய பிழைக்காகச் சினம் கொள்ளவில்லை ; அதைப் பெரிதாக எண்ணவும் இல்லை. தன் தனிமைக்காகத்தான் அவள் வருந்தினாள் ; உலகமெல்லாம் துயிலில் ஆழ்ந்திருக்கும்பொழுது அவள் வருந்தினாள்.

"கடவுளே, இதற்கு ஒரு பரிகாரம் இல்லையா !” என்று ஏங்கினர் தோழிமார். அந்தப் பெண்தெய்வத்தோடு சார்ந்த சார்பினால் அவர்கள் உள்ளத்திலே கூடக் கோபம் மறைந்து விட்டது. தலைவனுடைய செயலைக் குறித்து அவர்களுக்கு வெறுப்பும் சினமும் முதலில் உண்டாயின. இப்போது அவை மாறித் தலைவியின் இயல்பைக் கண்டு தோன்றிய வியப்பே இடங் கொண்டது.

“ இந்த ஊர்த் தலைவனுகிய அவன் இத்தகைய செயலில் இறங்கினானே ! ஆழந்தெரியாத மடுவைப் போல இருக்கிறது அவன் உள்ளம்" என்றாள் ஒரு தோழி.

"ஆம், நல்ல உவமை. அவனே அந்த மடுவைப் போன்றவன்தான் ; ஆழம் அளவிட முடியாத மடு. அதில் முதலை வாழ்கிறது. பலம் பொருந்திய ஆண் முதலை, முதலைப் போத்து, வாழ்கிறது. எவ்வளவு ஆழமாக இருக்கும் !"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/68&oldid=1529437" இலிருந்து மீள்விக்கப்பட்டது