பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரதேசியின் உபாயம்

 திருச்செந்தூர்க் கோயிலுக்குப் புதிய மானேஜர் வந்தார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஜனங்கள் பல இடங்களிலிருந்து வந்து செந்திலாண்டவனைத் தரிசித்துச் செல்வார்கள் ; காணிக்கை செலுத்துவார்கள். அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடைபெறும்.

புதிய மானேஜர் நெற்றி நிறையத் திருநீறு பூசுகிறவர்; கழுத்தில் ஆறு முக ருத்திராட்சம் கட்டிக் கொண்டிருக்கிறவர். பார்த்தால் சிவப்பழமாகத் தோற்றம் அளிப்பார். ஆனால் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தை அந்தத் தோற்றத்திற்கு ஏற்றபடி இராது. கோயிலைத் தாமே தனியே நிர்வாகம் செய்து ஆண்டவனையே தாங்குபவரைப் போன்ற ஞாபகம் அவருக்கு. வருகின்ற அடியார்களிடம் அன்போடு பேசி, வேண்டிய செளகரியம் செய்து கொடுக்க வேண்டியது அவர் கடமை. அப்படி யில்லாமல் வாசலில் வேட்டை நாயைக் கட்டினதைப்போல் இருந்தது அவர் நிலை.

அடியார்கள் வந்தால், அது பண்ணக்கூடாது இது பண்ணக்கூடாது, அப்படிச் செய்யாதே இப்படிச் செய்யாதே என்று அதிகாரம் பண்ணி அதட்டுவார். பூசகர்களையும் ஏவலாளர்களையும் காரணம் இல்லாமல் கண்டித்து மிரட்டுவார். எந்தச் சமயத்திலும் கடுகடு வென்ற முகமும் சுடுகின்ற சொல்லும் உடையவராக இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/93&oldid=1529813" இலிருந்து மீள்விக்கப்பட்டது