பக்கம்:எழிலோவியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


3

உருவொளி மங்கித் திங்கள்
உன்வழி நோக்கி நோக்கிக்
கருகிடும் நிலையைக் காண
அல்லியும் கலங்கும்! மற்றுன்
வருகையை உரைக்க நொச்சி
மணக்காற்றும் வெளுத்த வானும்
இருக்கையில், குயிலும் சிட்டும்
ஏதுக்குன் வரவைப் பாடும்?

4

பனித்திரை விலக்கி மெல்லப்
பார்த்தனை; சிரித்தாய்; நாட்டில்
பனிஇல்லை; குளிரும் இல்லை;
படரிருள் போர்வை இல்லை;
இனிமையில் உயிர்கள் யாவும்
எழுந்தன; மக்கள் நெஞ்சில்
தனியொரு இன்பம் சேர்த்தாய்;
தழைக்காட்டுக் கழகு சேர்த்தாய்!

5

மடமையில் துயிலும் மக்கள்
விழிகளைத் திறந்தாய்; முல்லைக்
கொடிகளைச் சிரிக்கச் செய்தாய்;
குளம்குட்டைக் கழகு சேர்த்தாய்;
இடையில்வாழ் தாம ரைச்செவ்
விதழ்காட்டி அழைத்தாய்; ஈந்தாய்;
தடையுண்டோ உனக்கிந் நாட்டில்?
ஞாயிறே! தமிழே! வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/19&oldid=1397928" இலிருந்து மீள்விக்கப்பட்டது