பக்கம்:எழிலோவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டுத் தாகூர்


காணாத ஒன்றினைக் காணும்போதும், கேளாத ஒன்றினைக் கேட்கும்போதும், நினையாத ஒன்றினை நினைக்க வாய்ப்பு நேரும்போதும் நம் உள்ளத்தில் நம்மை அறியாமலேயே தோன்றுவது கவிதை.

யாப்பிலக்கணம் கற்றுச் சொல்லழகினையும் பொருளழகினையும் இடையிடையே அமைத்துப் புனைவதே கவிதையாகாது. தன்னை மறந்த நிலையிலே உள்ளத்திலிருந்து ஊறி எழுந்து பா வடிவாக அமைவதே கவிதையாகும். இன்பத்தை மட்டும் நுகர்ந்து அதன் பேற்றினைப் பா வடிவில் அமைத்து மகிழ்பவன் கவிஞனாகான். கவிஞனுள்ளம் ஒரு சிறந்த ஞானியின் உள்ளத்தினும் உயர்ந்த தன்மை வாய்ந்தது. கவிஞன் இன்பத்தையும் துன்பத்தையும் கூர்ந்து நினைந்து அவ்விரண்டு தன்மைகளையும் அவைகளின் வடிவாகவே இருந்து நமக்கு விளக்கிக் காட்டுவான்.

உலகத்தைத் திருத்துவது மட்டும் கவிதையின் செயலன்று. ஓர் ஓவியன் தன் துகிலிகையினால் அரிய படத்தினைத் தீட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவது போன்று ஒரு சிறந்த கவிஞன் தன் சிறந்த பாடல்களால் மக்களுக்குப் பெரு மகிழ்ச்சியினை விளைவிக்கின்றான். படத்தில் எழுதிக் காட்டுவதினும் எண்ணிப் பார்க்கச் செய்யும் கவிஞனின் திறமையே சாலச் சிறந்ததாக விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/7&oldid=1300739" இலிருந்து மீள்விக்கப்பட்டது