பக்கம்:எழில் விருத்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 . வாணிதாசன் மாநாட்டிற்குப் பாவேந்தர் அவர்களே தலைமை தாங்கினார்கள். அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் கவியரங்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் நடை பெறுகின்ற கவியரங்கத்தைப் போன்றதல்ல அது. அழகின் சிரிப்பு என்ற ஒரே தலைப்பை முன்கூட்டித் தந்திருந்தனர். ஒரே தலைப்பில் பல கவிஞர்களும் பாட்டெழுதிக் கொடுக்க வேண்டும். அப்பாடல்களில் ஆய்வாளர்கள் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவர். மாநாட்டு மன்றத்தில் பாடச் செய்வர். நானும் அக்கவியரங்கில் பங்கு பெற்றேன். வெள்ளிக் கிண்ணப் பரிசும் பாராட்டும் பெற்றேன். நினைத்து பார்க்கின் மாநாட்டுக்குச் சென்ற பாவேந்தர் அவர்கட்குத் துணையாக நான் சென்றதையும் அவரோடு ஜி.டி.நாயுடு இல்லத்தில் தங்கியிருந்ததையும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் எழுத பல ஏடுகள் போதா என எண்ணுகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் குறிப்படாமல் இருக்க இயலவில்லை. அதாவது ஜி.டி. நாயுடு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தபோது எட்டயபுர அரச குடும்பத்தைச் சேர்ந்த பெருஞ்செல்வர் இருவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை அழைத்துப் போக வந்திருந்தனர். அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது பாரதியாரைப் பற்றிய பேச்சு வந்தது. பாவேந்தர் அவர்கள் பாரதியார் பாடலை பாரதியார் போலவே உணர்ச்சி மேலிடப் பாடிக் காட்டினார். நான் பாரதியாரைப் பார்த்ததில்லை. ஆனால் பாவேந்தர் பாடியபோது அவரது உணர்ச்சி மிகுந்த பாடலும் தோற்றமும் பாரதியாரைப் படம் பிடித்துக் காட்டின. .. . -