பக்கம்:எழில் விருத்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - வாணிதாசன் 'பாரதியார், பாரதிதாசர், வாணிதாசர் ஆகிய இந்த மூவரும் மூன்று விதமான தன்மையில் கவி புனைந்திருக்கின்றனர். பாரதியார் அந்தக் காலத்துக்கு ஏற்ப இந்திய மக்களின் சுதந்தர உணர்ச்சியினைத் தட்டி எழுப்பும் வகையில் பாடினார். பாரதிதாசரின் பாடல்கள் பெரும்பாலும் சீர்திருத்த நோக்குடையன. வாணிதாசனார் அவர்களோ இந்த இருவரினும் விஞ்சிய வகையில் உலக நிகழ்ச்சிகள், இயற்கைத் தோற்றங்கள் முதலிய பலவற்றையும் உள்ளுர நினைந்து பார்த்து உளமுருகிப் பாடி வருகின்றார். இவரிடம் பிற புலவர்களுக்குத் தோன்றாத புத்தம் புதிய கருத்துக்களை எல்லாம் நிரம்பக் காணலாம்." புதுமைக் கவிஞர் வாணிதாசனார் மேற்காட்டிய முன்னோர் மொழி பொருளுக்கேற்பத் தூய தீந்தமிழை வளர்த்து வருகிறார். அவருடைய பதினான்காவது படைப்பாகிய 'எழில் விருத்தம்' என்னும் இந்நூல், இயற்கையின் எழிலோவியமாகவும், இலக்கணத்தை விளக்குவதாகவும், வளர்ந்து வரும் புதுக் கவிஞர்களுக்கு ஊன்று கோலாகவும், கைவிளக்காகவும், வழிகாட்டியாகவும் விளங்குகின்ற.