பக்கம்:எழில் விருத்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 61 வெண்ணிலவு மேற்றிசையில் ஒளிமங்கிச் சாயும்; விடிவெள்ளி கீழ்த்திசையில் புன்முறுவல் பூக்கும்: பண்ணெழுப்பும் வரிவண்டு, முல்லைமலர் நாறும்; பசுங்குழவி விழிமலர்த்திக் காலுதைத்துக் கத்தும், கண்ணுறங்கா துறங்குகின்ற இளந்தாயின் கைகள் கைக்குழந்தை உடல்வருடும்; பூமணத்தை வாரி மண்ணெழுந்து குளிர்காற்று மெல்லவந்து சேரும் மரக்கிளைகள் சலசலக்கும்; மலர்ந்துவரும் காலை 1 பொன்பூத்த கருவானம் பொலிவற்றுப் போகும்: புதரெல்லாம் சிட்டிசைக்கும்; வீட்டோரச் சாலை முன்பூத்த மரமெல்லாம் தாதுதிர்க்கும்; வேலி முள்முருங்கைக் கருமொட்டுச் செவ்விதழை நீட்டும்: மின்பூத்த விடைநல்லார் இல்லத்துப் பெண்கள் வெளிக்கதவின் தாழ்விலக்கச் சிலம்பொலிக்கும் முன்றில்: பின்பூத்து வருங்கதிரோன் வரவுரைக்கக் கீழ்வான் பேரழகை உலகளிக்கும் மலர்ந்துவரும் காலை 2