பக்கம்:எழில் விருத்தம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q{} வாணிதாசன் ஒவ்வொரு கொம்யூனிலும் சென்ட்ரல் ஸ்கூல் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதில் தொடக்க முதல் இறுதி வரை தமிழும் பிரெஞ்சு மொழியுமே கற்பித்து வந்தார்கள். நான் உருண்டோடும் கல்லைப்போல் வில்லியனுர், பாகூர், புதுவை ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் மாறி மாறிப் படித்துக் கொண்டிருந்தேன். புதுவையில் நான் நான்காம் வகுப்புப் படிக்கும் போது பாவேந்தர் தமிழ் வகுப்பு நடத்தி வந்தார். நான் வில்லியனு ரில்தான் நிலைத் துப் படிக்கத் தொடங்கினேன். அங்கே தலைமையாசிரியராக இருந்தவர் சி.சு. கிருஷ்ணன் அவர்களாவர். அவர் தமிழ்ப் பற்றும் பிரெஞ்சுமொழி வளமும் நிறைந்தவர். எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை ஆகியோர் என் வகுப்பிற்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார்கள். புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனால் என்னுள் இடப்பட்ட தமிழ் வித்து வில்லியனுர் தமிழாசிரியர்களால் செடியாக மாறியது. தலைமையாசிரியர் கிருஷ்ணனால் நீர் ஊற்றி வளர்க்கப்பட்டது. அது முதல் எனது தமிழுணர்வு மேலோங்கத் தொடங்கியது. வகுப்புகளை மேற்பார்வையிட வரும் தலைமையாசிரியர் எங்கள் செய்யுள் வகுப்பில் முதல் இரண்டடியைச் சொல்லிப் பின்னிரண்டடியைக் கேட்பார்; நானே முதலில் சொல்ல எழுவேன். "ஏய் முந்திரிக் கொட்டை உட்கார்" என்பார் தலைமையாசிரியர். மற்ற மாணவரிடமிருந்து பதில் வராத பின்னரே என்னைக் கூறச்சொல்வார். முழுச்செய்யுளையும் பிழையறப் பாடுவேன். தமிழாசிரியரும் தலைமையாசிரியரும் என்னைப் பாராட்டுவார்கள். அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கின் என் உள்ளம் விம்மு கிறது. -