பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உதறிவிட்டு எழுத்துத்துறையில் ஈடுபட்டவர்களும் பலராவர். அவர்களில் அநேகர் பத்திரிகைகளில் சேர்ந்து பணிபுரிந்தாங்கள், சிரமமான வாழ்க்கையை அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் மொழிக்காகவும் சமூக உயர்வுக்காகவும் பத்திரிகைகள் மூலம், எழுத்துக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவர்களை வாழ்க்கை வெகுவாக சோதிக்கத் தான் செய்தது. என்ருலும் கூட, தாங்களாகவே ஏற்றுக்கொண்ட பாரமான சிலுவையை அவர்கள் மகிழ்ச்சியோடு சுமந்தார்கள். எழுத்துப்பணியில் அவர்கள் சந்தோஷம் கண்டார்கள்.

அந்தக் காலத்தில் இலக்கியப் பத்திரிகைகள் என்று ஒரு சில தான் வெளிவந்தன. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, ஆனந்த போதினி ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை. இவை தமிழுக்குக் கதி கம்பனும் திருவள்ளுவரும் தான் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தன. வித்வான்களும் பண்டிதர்களும் பேரறிஞர்களும் கம்பராமாயணம், திருக்குறள், சங்ககால இலக்கியம் பற்றி இவற்றில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள் ஆனந்த போதினி தற்கால ரீதியில் தொடர் கதையும் பிரசுரித்தது. நாரணதுரைக்கண்ணன் அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

அத்தகைய ஒரு சூழ்நிலையிலே தான், இலக்கியம் அகண்டமானது வளர்ந்து கொண்டே இருப்பது ; கதைகளும் கட்டுரைகளும் பாரதி கவிதைகளும் இலக்கியம் தான் என்று அறிவுறுத்தி, செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டது. அதை அவர்கள் திறமையாகவே நிறைவேற்றினார்கள்.

அக்காலகட்டத்தில் தான் ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையும் வளரலாயிற்று. அது ஜனரஞ்சகப் பத்திரிகையாகவே