பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

ருசிக்கு உட்பட்டவாறு எழுதப்படுகிற எழுத்துக்களைத் தான் வெகுஜனப் பத்திரிகைகள் ஏற்றுக் கொள்ளும்.

இன்றைய வாசகர்கள் இன்னின்ன விதமான கதை கட்டுரைகளைத் தான் விரும்பி வரவேற்கிறார்கள் என்று, விற்பனை அடிப்படையில், வெற்றிகரமான வணிகப் பத்திரிகைகள் முடிவு செய்து வைத்திருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே கதைகளும் இதர விஷயங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகை நடத்துகிறவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

புகழ் பெற்ற எழுத்தாளர்களும், சராசரி எழுத்தாளர்களும் பத்திரிகைக்காரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதே வேளையில், தாங்கள் சுதந்திரமாக இயங்குவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.

பத்திரிகைகளின் பக்கங்கள் நிரம்புவதற்கு எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தேவை தான். ஆனால், எழுத்தாளர்களின் சுய சிந்தனை ரீதியான - அவரவர் நோக்கிற்கும் கொள்கைகளுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றபடி எழுதப் படுகிற - சுதந்திர எழுத்துக்கள் தேவையில்லை, புதுமையான, சோதனை ரீதியான - கனமான, ஆழ்ந்த படைப்புக்கள் தேவையில்லை. இப்படி பத்திரிகை நடத்துகிறவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுகிறவை வாசகர்களை எட்ட வேண்டும். அதற்கு பத்திரிகைகளின் துணை தேவை. பெரும்பாலானவர்களுக்கு இவ்வாய்ப்பு கிட்டுவதில்லை என்ற நிலைமையே தற்காலத்தில் நிலவுகிறது.