பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

வெகு சிறப்பாகவும், வசீகரமாகவும் மிளிர்கின்றன. சில கதைகள் கட்டுரைகள் விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்துகின்றன. இந்த வித முயற்சிகளைப் பாராட்டத்தான் வேண்டும்.

இவை எல்லாம் இளைஞர்களின் ஆற்றலை, உழைப்பை, பொறுமையை மற்றும் எழுத்துக் கலையிலும் பத்திரிகைத் துறையிலும் அவர்களுக்கிருக்கிற ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றன.

கையெழுத்துப் பத்திரிகை சுய பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் நல்ல தளமாக அமைய முடியும். திறமையை வளர்த்துக் கொள்வதற்கும், எழுதி எழுதி முன்னேற்றம் பெறுவதற்கும் உதவக் கூடிய பயிற்சிக் களமாக விளங்க வேண்டும் இந்த சக முயற்சிகள். வளர்கிற எழுத்தாளன் எழுதுகிற எழுத்துக்களை சேமித்து வைக்கிற மலர்க் கூடை போல் கையெழுத்துப் பத்திரிகை இருக்கிறது என்று பெரிய எழுத்தாளர் ஒருவர் ஒரு சமயம் சொன்னார், அதுவும் பொருத்தமானதே.

கையெழுத்துப் பத்திரிகை நடத்துகிறவர்களில் அநேகர், காலப் போக்கில், தங்கள் சஞ்சிகையை அச்சுப் பத்திரிகையாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தீவிரமாக முயல்கிறார்கள். சில சமயம் வெற்றியும் பெறுகிறார்கள்.

இந்தவித உந்துதல்களினாலும் சிறு பத்திரிகைகள் அதிகம் தோன்றுவது இயல்பாக இருக்கிறது. சிறு பத்திரிகை முயற்சிகளில் பெரும்பல வெறும் ஆர்வ வெளிப்பாடுகளாக இருக்கின்றனவே தவிர, உண்மையான எழுத்தாற்றலின், சிந்தனையின், மலர்ச்சியாகவோ, தரமான எழுத்துக்களின்