பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அளவைகளாகவோ அமைந்து காணப்படுவதில்லை. இது வருத்தத்துக்குரியது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்: எழுத வேண்டும், எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற ஆசையும் நினைப்பும் இருக்கிற அளவுக்கு பத்திரிகை நடத்த வேண்டும் எனும் வேகம் செயல்படுகிற - அளவுக்கு அதற்காக தங்களைத் தாங்களே தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும், சிரமம் எடுத்து உழைத்தாக வேண்டும் என்ற உணர்வும் ஈடுபாடும் பெரும்பாலோருக்கு இல்லை.

எந்தத் துறையிலாயினும் சரியே, உண்மையான வளர்ச்சியும் முன்னேற்றமும் பெறுவதற்கு, அதில் ஈடுபடுகிறவர், இருக்கிற திறமையை வளர்த்துக் கொள்ள ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்காக அவர் கடுமையாக உழைத்தாக வேண்டும். எழுத்துத் துறையும் இதற்கு விதி விலக்கு இல்லை.

எழுத்தாளர்களாக விரும்புகிறவர்கள் பத்திரிகைகளை மட்டும் படித்தால் போதாது. சமகால எழுத்தாளர்களில் புகழ் பெற்ற ஒரு சிலரின் எழுத்துக்களை மாத்திரம் படித்தால் போதாது. பரவலாக, நிறைய நிறையப் படிக்க வேண்டும்.

தற்காலத்தில் எழுதப்பட்டு வெளி வருகிற புத்தகங்களில் தரமானவை என்று ரசிகர்களால் கூறப்படுகிற அனைத்தையும் இளைய எழுத்தாளர்கள் படித்தறிவது நல்லது. அவற்றுடன் முந்திய தலைமுறை எழுத்தாளர்களில், சாதனை புரிந்திருப்பவர்கள் என்று பெயர் பெற்றிருப்பவர்களது படைப்புக்களையும் தேடிப் பிடித்துப் படிக்க முயல வேண்டும்.