பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


அப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுத வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. புக்ஸ் 'ரிஸீவ்ட் கால'த்தைப் பார்த்து விட்டே, புத்தகங்கள் தேவை என்று ஏகப்பட்ட ஆர்டர்கள் வரும்.

இப்போது அந்த அளவுக்கு ஆர்டர்கள், வருவதாக எவரும் சொல்வதில்லை. 'குமுதம்' இதழில் 'பு(து)த்தகம்' என்ற தலைப்பில் வருகிற பட்டியலை பார்த்து விட்டு கடிதம் எழுதுகிறவர்கள் அதிகம் என்று சில வெளியீட்டாளர்கள் சொல்கிறார்கள்.

1940 கள் 50 களில்- இரண்டாவது உலக மகாயுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் - ஜனங்களிடம் பணப் புழக்கம் அதிகம் இருந்தது ; புத்தகங்கள் வாங்கும் ஆர்வமும் இருந்தது என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு.

இக்காலத்தில் பணப்புழக்கம் குறைந்தா இருக்கிறது? பஸ்களிலும், சினிமா தியேட்டர்களிலும், ஓட்டல்களிலும் எத்த நேரத்திலும் சாடுகிற கும்பலையும் ஏற்படுகிற நெருக்கடியையும் பார்த்தால், 'பணக்கஷ்டம்' 'பணப்புழக்கம் கம்மி" என்று சொல்லவா முடியும்? தனி நபர்கள் ஆடம்பர அலங்கார வகைகளுக்குச் செய்கிற செலவுகளைக் கவனிக்கையில், பணப் புழக்கம் குறைந்திருக்கிறது என்று சொல்லத்தான் முடியுமா?

வாசிக்கத் தெரிந்தவர்கள் பத்திரிகைகள் வாங்குவதில் ஆர்வம் கொள்கிறார்கள். புத்தகங்கள் வாங்க விரும்புவதில்லை. இது பெரிய குறைபாடு.

சினிமாவுக்கும் ஓட்டலுக்கும், கணக்குப் பார்க்காமலே, தாராளமாகப் பணம் செலவு பண்ணத் தயாராக இருக்கிறார்கள்.