பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

இதுவே மனித தேயம் உடைய, சிந்தனைத் திறன் படைத்த, எழுத்தாளர் ஒவ்வொருவரின் இதய ஒலியாக அமைதல் வேண்டும்.

பத்திரிகைத் துறையிலும் புத்தக உலகிலும் எழுத்து வாழ்க்கையிலும், நிலவுகிற பிற்போக்குத் தன்மைகளும் குறைபாடுகளும், அதிகமாக இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. இளைய எழுத்தாளர்களுக்குத் தயக்கமும் அச்சமும் உண்டாக்க வேண்டும், என்பதற்காக அல்ல.

எழுத்துத் துறையில் ஈடுபடுகிறவர்கள், முன்னேற விரும்புகிறவர்கள், போலியான தம்பிக்கைகயுைம். பொய்யான எதிர்பார்த்தல்களையும் வளர்த்துக் கொண்டு வெகு விரைவிலேயே சோர்வும் விரக்தியும் அடைந்து, எழுதுவதையே விட்டுவிடக் கூடாது; உண்மை நிலைமைகளைப் புரிந்து கொண்டு மனோதிடத்துடன் உழைக்க வேண்டும். இந்த எண்ணத்துடனேயே இவை கூறப்பட்டுள்ளன.

எந்தத் தொழிலை, துறையை, வாழ்க்கை முறையை எடுத்துக் கொண்டாலும், எங்கும் குறைபாடுகள், துன்பங்கள், சிரமங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் உண்டு. அவற்றை எதிர் கொண்டு, ஏற்று, போராடி, வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும்.

வாழ்க்கையே ஒரு சவால் தான். அதில், எதிர்ப்படுகின்றவற்றை வரவேற்று, சமரிட்டு, வெற்றி பெறுவதே திறமை ஆகும். உழைப்பு, அதற்குத் துணை புரியும். தன்னம்பிக்கை உந்து சக்தியாக இருக்கும்.