பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இவை இங்கிலீஷில் எழுதப்பட்டிருந்தாலும், தமிழ் இலக்கிய அரங்கில் மதிப்பீட்டு முறையின் ஆரம்பகால மாதிரிகள் என்று கருதப்பட வேண்டியவையாகும். புஸ்தக உற்பத்தி, பத்திரிகைப் பெருக்கு மூலம் தெளிவாகத் தெரியும் இன்றைய பரபரப்புக்கு மாறாக, இலக்கிய முயற்சிகள் சந்தடியற்ற சூழ்நிலையில் நடைபெற்றுவந்த ஒருகாலம் அது. ஒழுங்குபடுத்திய நோக்கு ஒன்று கொண்ட விமர்சன அபிப்ராயம் வாய்ந்த இந்த வரிகள், அவ்வளவு ஆரம்ப தசையிலும் கூட ஒரு புஸ்தக மதிப்புரை முறை இலக்கிய விமர்சன முறை எல்லைக்குள் வந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. டென்னிஸனைப்பற்றியும் நாவல் லக்ஷணம், உத்திகளைப் பற்றியும் பிரஸ்தாபித்திருப்பது, ஒரளவுக்கு மதிப்புரையாளருக்கு மேற்கத்திய இலக்கியம், அதன் விமர்சன நியதிகளையும் பற்றிய விஷயஞானம் இருப்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

புதுவித பரிசோதனை ஆரம்பம்

உரைநடையைப் பரிசீலனை செய்வது நிலையாகப் பின்பற்றப் படவில்லை. ஏனென்றால் மேய்வதற்கு வேண்டிய அளவு அப்போது கிடையாது. ஆனால் இந்த புதுவித பரிசோதனையின் ஆதாயத்தை பெறும் பேறு இந்த நூற்றாண்டின் முதல் மூன்று பத்தாண்டுகளில் கவிதைக்குக் கிடைத்தது. தமிழ் சிறுகதையின் தந்தையான வ.வெ.சு.அய்யர், பலமொழி இலக்கியங்களுடன் தனக்கு இருந்த நல்ல பயிற்சியுடன், அவரே கூறி இருப்பதுபோல, 'வாசகர்கள், பண்டிதர்களின் கண்களைத் திறக்கவும்' விஷயத்தை புதுநோக்குடன் பார்க்கச் செய்யவும் வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். சம்பிரதாயமானகவிதை இலக்கணங்களையும் நியதிகளையும் பற்றிய சிந்தனைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல், முன்கால இங்கிலீஷ் இலக்கிய விமர்சகர்களது முறையைப்பின்பற்றி, அந்த சந்தர்ப்பத்துக்கு, தன்முன் இருந்த வேலை, 'சாமான்ய ஜனங்களுக்கு இவ்வுணர்ச்சிகளும் எண்ணங்களும் பரவுவதற்கு உதவியாக இருக்க, பழைய காவியங்களில் நயம் காணுவது தான் என்று நம்பினார். நாற்பது வருஷங்களுக்குமுன்பு எழுதப்பட்ட 'மறுமலர்ச்சி கவிதை’ என்ற அவரது இரண்டு கட்டுரைகளும், இந்த மாறும் மனப்பாங்கை

93