பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


அநுபந்தங்களில் வெளியானவை. தங்கள் முன் உள்ள இலக்கிய ரகத்தைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாகவோ அல்லது அக்கறை இல்லாதவர்களாகவோ உள்ளவர்களது கையில் மதிப்புரைகள் ஆரம்ப திசை நிலையிலேயே நின்று விடுகின்றன.

படைப்பாளியும் மதிப்பீடும்

தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் பரிதாபகரமான அம்சங்களில் ஒன்று படைப்பாளியே இந்த மதிப்பீட்டு வேலையையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருப்பதுதான். ஒரு சிறுகதை ஆசிரியனோ நாவலாசிரியனோ மற்றொருவரது படைப்பை அளவிட வேண்டி இருக்கிறது. கவிதையை மட்டும் விரும்பி ரசித்துக் கொண்டிருக்கும் பண்டிதப்போக்கு உரைகாரர்களுக்கு உரைநடை நூல்களைப் பற்றி உற்சாகம் கிடையாது. மேற்கத்திய இலக்கிய அறிவு பெற்றுள்ள பேராசிரியர்களைப் பற்றியும் இதேதான் சொல்ல வேண்டும். பழைய இலக்கியங்களில் நல்ல பயிற்சி உள்ள சாமி சிதம்பர சார், ‘செய்யுள் அல்லாதவைகள் இலக்கியம் அல்ல என்ற கருத்து வெகு காலமாக நீடித்து வந்திருக்கிறது. இது ரொம்ப தவறானது. உரைநடை இலக்கியங்களையும் நாம்மதிப்பிட முற்பட வேண்டும்’ என்று ஒரு இடத்தில் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, தான் அறையப்படும் மரத்தைத்தானே துக்கிச் சென்றவரைப் போல, சென்ற இருபதாண்டு படைப் பார்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் மதிப்பிட்டுக்கொள்வதற்கு,தங்கள் திறனாய்வு அறிவை உபயோகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. -

படைப்பாளிகள் தாங்களே இதைச் செய்ய வேண்டுமா என்று தங்களையே கேட்டுக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, நாம் மதிப்பீடு செய்ய அவசரப்படவேண்டாம், படைப்பு திசையில் நாம் நமது கண்களை முனைக்கச்செய்தால்போதும் என்று சொல்பவர்களும் உண்டு. சில மாதங்களுக்கு முன் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற இலக்கிய விமர்சனம் பற்றிய விவாதத்தின்போது ந. பிச்சமூர்த்தியும் கு. அழகிரி சாமியும் இந்த அபிப்ராயத்தைக் கூறினார்கள். இதற்கு மாறாக, ரா.ஸ்ரீ தேசிகன், க.நா.சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா

98